உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷியா தாக்குதல்

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 388வது நாளாக போர் நீடித்து வருகிறது.
கீவ்,
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 388வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள துறைமுகங்கள் மீது ரஷியா நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் ஒடிசா மாகாணத்தில் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குரோனொமொர்க், ஒடிசா ஆகிய 2 துறைமுகங்கள் மீது டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்கள் கடும் சேதமடைந்தன.
குறிப்பாக, குரோனொமொர்க் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துருக்கி நாட்டின் 3 கப்பல்கள் சேதமடைந்தன. இந்த கப்பல்கள் உணவு தானியங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வந்தன என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, துறைமுகங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.






