ரஷிய-உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தில் காலதாமதம்; விரக்தியில் டிரம்ப்

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வராமல் டிரம்ப் பெரிய அளவில் மனமுடைந்து போய் உள்ளார்.
வாஷிங்டன் டி.சி.,
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. தொடக்கத்தில் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றுவதும், தாக்குவதும் பின்னர் அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்பதும் தொடர்ந்தது.
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடி விட்டனர்.
இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் டிரம்ப் பேசினார். இதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளன என வெள்ளை மாளிகையில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
இதேபோன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலருடனும் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், ரஷியாவோ போரை நிறுத்தும் முடிவுக்கு வரவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில், ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வருவதில் காணப்படும் மெதுவான முன்னேற்றம் டிரம்பை பெரிய அளவில் விரக்தியடைய செய்துள்ளது.
இதுபற்றி வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, 4 ஆண்டு கால தொடர் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முதன்மை மத்தியஸ்தராக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. எனினும், எந்தவித முன்னேற்றமும் இல்லாத மற்றும் விரும்பிய முடிவுகள் கிடைக்காமல் வெறும் கூட்டங்கள் மட்டும் நடந்துள்ளதில் டிரம்ப் சோர்வடைந்து விட்டார்.
இரு தரப்பிலும் நடந்து வரும் இந்த போரால் டிரம்ப் பெரிய அளவில் மனமுடைந்து போய் உள்ளார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் காணப்படும் காலதாமதம் டிரம்பை விரக்தியடைய செய்து விட்டது.
டிரம்ப், இனியும் இதுதொடர்பாக எதுவும் பேச விரும்பவில்லை. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறார். இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என அவர் விரும்புகிறார் என லீவிட் கூறியுள்ளார்.






