ஆப்கானிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்: 10 பேர் பலி; 260 பேர் காயம் - வைரலான வீடியோ

அமெரிக்காவின் புவியியல் அமைப்பு ஆரஞ்சு அலர்ட்டுக்கான எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது.
மஜார்-இ-ஷெரீப்,
போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டு வருகிற ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு இயற்கையும் சவால் விட்டு வருகிறது. அந்நாட்டின் வடக்கே அமைந்த சமங்கன் என்ற மலைப்பாங்கான மாகாணத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.23 லட்சம் பேர் வசிக்க கூடிய மஜார்-இ-ஷெரீப் என்ற நகரில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. இதனால், வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. அதிகாலையில் மக்கள் உறங்கி கொண்டிருந்த, இருள் சூழ்ந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால், மக்கள் தப்பி செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது. இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
இதுபற்றி ஆப்கானிஸ்தான் நாட்டின் தலீபான் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, பால்க் மற்றும் சமங்கன் மாகாணங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், எண்ணற்றோர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது என தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, ராணுவத்தின் மீட்பு மற்றும் அவசரகால உதவி குழுக்கள் உடனடியாக சென்று மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்த நபர்களை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அமெரிக்காவின் புவியியல் அமைப்பு ஆரஞ்சு அலர்ட்டுக்கான எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது. இதனால், 10 பேர் பலியாகி உள்ளனர். 260 பேர் காயம் அடைந்துள்ளனர்.






