தென்கொரியா மீது 25 சதவீதம் வரி விதிப்பு - டிரம்ப் அறிவிப்பு


தென்கொரியா மீது 25 சதவீதம் வரி விதிப்பு - டிரம்ப் அறிவிப்பு
x

தற்போது டிரம்பின் கவனம் தென்கொரியா பக்கம் திரும்பி உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பொறுப்பேற்றார். அதன்பிறகு குடியேற்ற கொள்கையில் திருத்தம், மானியம் ரத்து என பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். மேலும் தனது பேச்சை கேட்காத உலக நாடுகள் மீது அதிக வரி விதிப்பதாகவும் அச்சுறுத்தல் விடுக்கிறார். இதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அந்த நாடுகள் மீது தாறுமாறாக வரி விதிப்பது தொடர் கதையாக உள்ளது.

அதன்படி சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பொருட்களுக்கு வரியை உயர்த்தினார். அந்தவரிசையில் தற்போது டிரம்பின் கவனம் தென்கொரியா பக்கம் திரும்பி உள்ளது. அதாவது தென்கொரியாவுடன் கடந்த ஜூலை மாதம் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுதொடர்பாக அதிபர் லீ ஜே மியுங்கை அக்டோபர் மாதம் சந்தித்து மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ஆனால் இதுவரை அந்த ஒப்பந்தத்தை தென்கொரியா அங்கீகரிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் தற்போது இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளார்.

இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்காதது அவர்களது தனிப்பட்ட உரிமை என்றாலும் அமெரிக்காவுக்கு இது மிக முக்கியமான ஒன்று. எனவே இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த தாமதம் செய்ததால் தென்கொரிய பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதித்திருப்பதாக டிரம்ப் அறிவித்தார். இதன்மூலம் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவுடன் உறுதிசெய்யப்பட்ட வர்த்தக கட்டமைப்புக்கு தென் கொரிய நாடாளுமன்றம் இன்னும் ஒப்புதல் அளிக்காத நிலையில் இந்த வரி உயர்வை டிரம்ப் அறிவித்துள்ளார்.

1 More update

Next Story