ஜி-20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது; டிரம்ப் அதிரடி முடிவு


ஜி-20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது;  டிரம்ப் அதிரடி முடிவு
x

தென் ஆப்பிரிக்காவில் மனித உரிமை மீறல் தொடர்வதால் அங்கு நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிகாரிகள் கலந்து கொள்ள மாட்டார்கள் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

வாஷிங்டன்

ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை கடந்த டிசம்பர் 1-ந்தேதி தென் ஆப்பிரிக்கா ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் வருகிற 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இதன்மூலம் முதன்முறையாக ஆப்பிரிக்க மண்ணில் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது.

அதன்பிறகு டிசம்பர் 1-ந்தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு ஜி-20 தலைமை பொறுப்பை அமெரிக்கா ஏற்க உள்ளது. இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் தான் கலந்து கொள்ள போவதில்லை எனவும், அதற்கு பதிலாக துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கலந்து கொள்வார் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் அறிவித்து இருந்தார். இந்தநிலையில் புளோரிடாவில் உள்ள அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பில் டிரம்ப் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த ஆண்டுக்கான ஜி-20 மாநாடு தென் ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற உள்ளது.

ஆனால் அங்கு சிறுபான்மை இன மக்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. குறிப்பாக சிறுபான்மை இன மக்களின் நிலம் மற்றும் பண்ணைகள் சட்ட விரோதமாக கையகப்படுத்தப்படுகின்றன. எனவே ஜி-20 கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்க தென் ஆப்பிரிக்காவுக்கு தகுதி இல்லை. அங்கு மாநாடு நடைபெறுவது முழுமையான அவமானம் ஆகும். இந்த மனித உரிமை மீறல் தொடரும் வரை தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் மாநாட்டில் அமெரிக்க அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் புளோரிடாவின் மியாமியில் உள்ள தனது கோல்ப் அரங்கத்தில் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 மாநாட்டை நடத்த தான் திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் பேசினார்.டிரம்பின் இந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை தென் ஆப்பிரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. எனினும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது என்ற டிரம்பின் அறிவிப்பு அந்த கூட்டமைப்பில் உள்ள மற்ற நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

1 More update

Next Story