‘வெனிசுலா அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டனர்’ - டிரம்ப் அதிரடி அறிவிப்பு


‘வெனிசுலா அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டனர்’ - டிரம்ப் அதிரடி அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Jan 2026 3:33 PM IST (Updated: 4 Jan 2026 8:00 AM IST)
t-max-icont-min-icon

வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளது என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதனால் அமெரிக்க இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சூழல் ஏற்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வந்தார். மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாக டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதனிடையே, வெனிசுலா கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது வெனிசுலாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறி பல்வேறு கப்பல்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை முறியடிப்போம் என சூளுரைத்தார்.

இந்த சூழலில், வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. தாக்குதல் காரணமாக வெனிசுலா ராணுவ தளத்திற்கு அருகில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெனிசுலா நாட்டின் அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story