இந்திய இறக்குமதி பொருட்களுக்கான வரியை 15 சதவீதமாக குறைப்போம்; ஆனால்... டிரம்பின் திட்டம் என்ன?


இந்திய இறக்குமதி பொருட்களுக்கான வரியை 15 சதவீதமாக குறைப்போம்; ஆனால்... டிரம்பின் திட்டம் என்ன?
x

ஆசியன் உச்சி மாநாட்டில், டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இருவரும் சந்தித்து பேச உள்ளனர்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றது முதல் டிரம்ப் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதன்படி, கடந்த ஏப்ரல் 1-ந்தேதி, இந்தியா உள்பட பல நாடுகள் மீது வரி விதிப்பு பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார். பின்னர், அந்த நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு கால அவகாசம் அளிக்கும் வகையில், ஜூலை 9-ந்தேதி வரை வரி விதிப்பை ஒத்திவைத்தார்.

இந்த கால அவகாசம், ஆகஸ்டு 1-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக கடந்த ஜூலை இறுதியில் டிரம்ப் கூறினார். இதற்கு காரணங்களாக ரஷியாவிடம் இருந்து இந்தியா, கச்சா எண்ணெய், ராணுவ உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குகிறது என்றார். இதற்காக அபராதமும் விதிக்கப்படும் என்று அப்போது அவர் கூறினார்.

இதன்படி, ஏற்கனவே விதித்த 25 சதவீதம் வரியுடன் கூடுதலாக 25 சதவீதம் உயர்த்தப்பட்டு மொத்தம் இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதனால், இந்திய ஏற்றுமதி பொருட்களான துணி, உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

எனினும், இந்தியா தனது தேசிய நலன்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்தியா செயல்படுகிறது என ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது பற்றி மத்திய அரசு குறிப்பிட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை 50 சதவீதத்தில் இருந்து 15 முதல் 16 சதவீதம் என்ற அளவுக்கு குறைக்க டிரம்ப் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், இந்தியா-அமெரிக்கா இடையேயான நீண்ட காலம் நிறைவடையாமல் உள்ள வர்த்தக ஒப்பந்தம் ஒரு முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது.

ஆனால், இதற்கு பதிலாக ரஷியாவிடம் இருந்து வாங்க கூடிய கச்சா எண்ணெய்யை இந்தியா, சீராக குறைத்து கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட கூடும் என்றும் கூறப்படுகிறது. எனினும், சமீப ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையேயான வரி விதிப்புகள் தொடர்பான கசப்பான சம்பவங்கள் முடிவுக்கு வந்து பெரிய அளவிலான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட கூடும் என பார்க்கப்படுகிறது.

இதன்படி, இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள ஆசியன் உச்சி மாநாட்டில், டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இருவரும் சந்தித்து பேச உள்ளனர். அப்போது, முறைப்படி இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story