ரொம்ப அழகா இருக்கீங்க... அசடு வழிந்த டிரம்ப், மிரண்ட மெலோனி

உலக அரங்கில் டிரம்ப், தொடர்ந்து அமெரிக்காவுக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொள்கிறார் என ஹாரி சிஸ்சன் குற்றச்சாட்டாக கூறினார்.
கெய்ரோ,
காசாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான போர்நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்காக, டிரம்ப் இஸ்ரேலுக்கு ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் புறப்பட்டு சென்றார். இதன்பின்னர் எகிப்தில் ஷார்ம் எல்-ஷேக் என்ற சுற்றுலா நகரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதில், ஆயுதங்களை ஹமாஸ் அமைப்பினர் குறைப்பது உள்ளிட்ட 21 அம்ச திட்டங்களை டிரம்ப் வெளியிட்டார். அப்போது எகிப்து ஜனாதிபதி அப்தில் பத்தா எல்-சிசி, பிராந்திய அமைதிக்கு இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என குறிப்பிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, ஹமாஸ் பிடித்து வைத்திருந்த இஸ்ரேல் பணய கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் பின்னர் வீடு திரும்பி சொந்தங்களுடன் இணைந்தனர். இதனால், இஸ்ரேல் மற்றும் காசா பகுதியில் உள்ள பொதுமக்களிடையே, மீண்டும் மகிழ்ச்சி திரும்பியுள்ளது.
இந்த உச்சி மாநாட்டில், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், துருக்கி அதிபர் எர்டோகன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வந்திருந்தனர். இதில், ஒரேயொரு பெண் தலைவராக இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
அப்போது டிரம்ப், மெலோனியை கையை பிடித்து மேடையில் வரவேற்றார். இந்த சந்திப்பின்போது, டிரம்புக்கு இந்திய பாரம்பரிய முறையில் நமஸ்தே என வணக்கம் வைத்த மெலோனி, அனைவரின் கவனம் ஈர்த்தார்.
இந்த உச்சி மாநாட்டில், உலக நாடுகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டிரம்ப் உரையாற்றினார். அப்போது, இத்தாலி பிரதமர் மெலோனியின் அழகை வர்ணித்தது மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் இடையே கலகலப்பை ஏற்படுத்தியது.
நம்மிடையே ஒரு பெண், அதுவும் இளம் பெண் இருக்கிறார். இதனை நான் கூற அனுமதி இல்லை. அப்படி கூறினால், அதனுடன் என்னுடைய அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடும். ஆனாலும் இதனை கூறுகிறேன். அவர் அழகான ஓர் இளம் பெண் என கூறினார்.
அப்போது, மேடையில் டிரம்புக்கு பின்னால் மெலோனி நின்றார். 3 பேரை திருமணம் செய்தவரான டிரம்ப் தொடர்ந்து பேசும்போது, எங்கே அவர்? ஓ. நிற்கிறாரா! நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என நான் கூறியதற்காக ஏதும் வருத்தமில்லையே? ஏனென்றால் நீங்கள் அழகாகதான் இருக்கிறீர்கள் என அசடு வழிந்தார். இதனால், ஒரு பக்கம் மெலோனி ஆச்சரியப்பட்டாலும் சற்று அசவுகரியத்துடனும் காணப்பட்டார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான உச்சி மாநாட்டில் உரையாற்றிய டிரம்பின் இந்த பேச்சுக்கு ஜனநாயக கட்சியின் அரசியல் விமர்சகரான ஹாரி சிஸ்சன் கடுமையாக கண்டனம் தெரிவித்ததுடன், உலக அரங்கில் டிரம்ப், தொடர்ந்து அமெரிக்காவுக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொள்கிறார் என குற்றச்சாட்டாகவும் கூறினார்.
இந்த உச்சி மாநாட்டுக்கு வருகை தந்த ஒரே பெண்ணான மெலோனி, துருக்கி அதிபர் எர்டோகனின் விமர்சனத்திற்கும் ஆளானார். மெலோனியிடம் எர்டோகன் கூறும்போது, விமானத்தில் இருந்து நீங்கள் இறங்கி வந்தபோது உங்களை நான் பார்த்தேன். சிறப்பாக இருந்தீர்கள். ஆனால், நீங்கள் புகைப்பிடிக்கிறீர்கள் அல்லவா? அந்த பழக்கத்தில் இருந்து நான் உங்களை விடுவிக்க முயற்சிப்பேன் என கூறினார்.
அப்போது மேக்ரான் உடனடியாக, அது சாத்தியமில்லாதது என கூறி சிரிப்பை உதிர்த்தார். எனினும், புகைபிடித்தலை கைவிட்டால், அது சமூகத்தில் ஒன்றாக கலந்து இருப்பதில் இருந்து தனிமைப்படுத்தி விடும் என்று மெலோனி பதிலாக கூறினார்.






