கெஜ்ரிவால் கைதுக்கு பின்... முதன்முறையாக இன்று கூடுகிறது டெல்லி சட்டசபை கூட்டத்தொடர்


கெஜ்ரிவால் கைதுக்கு பின்... முதன்முறையாக இன்று கூடுகிறது டெல்லி சட்டசபை கூட்டத்தொடர்
x

டெல்லி சட்டசபை கூட்டத்தொடரில், இலவச மருந்துகள் மற்றும் இலவச பரிசோதனை திட்டங்கள் பற்றிய கேள்விகளுக்கு மந்திரி சவுரப் பதிலளிப்பார்.

புதுடெல்லி,

டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் ஆட்சி நடந்து வருகிறது. இதில், டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கில், டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு 9 முறை சம்மன் அனுப்பியபோதும், நேரில் ஆஜராகவில்லை. இது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்றது. எனினும், கெஜ்ரிவாலின் வழக்கை ஐகோர்ட்டு, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதேபோன்று, அமலாக்கத்துறை கைதுக்கு தடை விதிக்கவும் டெல்லி ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த வியாழக்கிழமை அமலாக்கத்துறை குழுவினர், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். 2 மணிநேர சோதனை மற்றும் விசாரணைக்கு பின்னர், அமலாக்க பிரிவு அதிகாரிகள் கெஜ்ரிவாலை அன்றிரவு கைது செய்தனர்.

இந்த நடவடிக்கைக்கு, அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, ராகுல் காந்தி, சரத் பவார், பிரியங்கா காந்தி, மு.க. ஸ்டாலின், சசி தரூர் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் பலரும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்தனர். இதற்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என ஆம் ஆத்மி தெரிவித்தது. அவருக்கு 28-ந்தேதி வரை அமலாக்க துறை காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

நாட்டில், முதல்-மந்திரியாக இருக்கும்போது, ஒருவர் கைது செய்யப்படுவது என்பது முதல் முறையாகும். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தீவிர பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள, ஆம் ஆத்மியை சேர்ந்த டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது அரசியலில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

எனினும், சிறையில் இருந்தபடி கெஜ்ரிவால் அரசை வழிநடத்துவார் என மந்திரி அதிஷி கூறினார். இந்நிலையில், அமலாக்க துறை காவலில் இருந்தபடி கெஜ்ரிவால் கடந்த ஞாயிற்று கிழமையன்று, தனது முதல் உத்தரவை வெளியிட்டார். இந்த உத்தரவானது, நீர் அமைச்சகத்துடன் தொடர்புடையது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், அமலாக்க துறை காவலில் உள்ள கெஜ்ரிவால் நேற்று 2-வது முறையாக உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். அரசால் நடத்தப்படும் மொகல்லா கிளினிக்குகளில் இலவச மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் செய்வது பற்றிய உத்தரவை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் கெஜ்ரிவால் கைதுக்கு பின்னர் முதன்முறையாக டெல்லி சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில், கெஜ்ரிவால் பிறப்பித்த உத்தரவின்மீது கவனம் செலுத்தி விவாதங்கள் நடைபெறும்.

இதுபற்றி சட்டசபையில் பேசும்படி டெல்லி சுகாதார மந்திரி சவுரப் பரத்வாஜிடம் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

டெல்லி மந்திரி சவுரப், தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், டெல்லி சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெறுகிறது. இதில் டெல்லி அரசு மருத்துவமனைகள் மற்றும் மொகல்லா கிளினிக்குகள் ஆகியவற்றின் நிலை பற்றி தகவல் தெரிவிக்கும்படி, தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதில், மருந்து பற்றாக்குறை போன்ற விசயங்கள் ஏதேனும் இருக்குமென்றால் அதனை சீர்செய்யும் வகையில் முழு திட்டத்துடன் வரும்படி அவரிடம் கூறியுள்ளேன். அதன்பின்னரே அதனை சட்டசபையில் நான் தெரிவிக்க முடியும் என்றும் பதிவிட்டு உள்ளார்.

இலவச மருந்துகள் மற்றும் இலவச பரிசோதனை திட்டங்கள் பற்றிய கேள்விகளுக்கு மந்திரி சவுரப் பதிலளிப்பார். மொகல்லா கிளினிக்குகளின் நிலை பற்றியும் அவர் பேச உள்ளார்.

1 More update

Next Story