பா.ஜ.க. தேர்தல் அறிக்கை; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் கமிட்டி


பா.ஜ.க. தேர்தல் அறிக்கை; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் கமிட்டி
x

பா.ஜ.க. சார்பிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான கமிட்டியில், குஜராத், அசாம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள் உள்பட 27 உறுப்பினர்கள் இடம் பெற்று உள்ளனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த தேர்தலில், மக்களுக்கு பயன் அளிக்க கூடிய வகையிலான திட்டங்களை கொண்டு ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும். அந்த வகையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

இதன்படி,, மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான கமிட்டியில், 27 உறுப்பினர்கள் இடம் பெற்று உள்ளனர். இந்த கமிட்டியானது, தேர்தல் வாக்குறுதிகளுக்காக நாடு முழுவதும் உள்ள மக்களிடம் இருந்து பல பயனுள்ள ஆலோசனைகளை சேகரிக்கும்.

இந்த கமிட்டியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒருங்கிணைப்பாளராகவும், மற்றொரு மத்திய மந்திரி பியூஷ் கோயல் இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள்.

இந்த கமிட்டியில், குஜராத், அசாம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள் மற்றும் பல்வேறு மத்திய மந்திரிகள், சிவராஜ் சிங் சவுகான் மற்றும் வசுந்தர ராஜே போன்ற தலைவர்கள் உள்ளிட்டோரும் கமிட்டியில் இடம் பெற்றுள்ளனர்.


Next Story