இந்திய குடியரசு கட்சியை புறக்கணிக்கும் பா.ஜனதா - அத்வாலே வேதனை
எங்கள் கட்சி 12 ஆண்டுகளாக பா.ஜனதாவில் கூட்டணியில் இருக்கும் போதும் புறக்கணிக்கப்படுகிறது என அத்வாலே கூறினார்
மும்பை,
மராட்டியத்தில் பா.ஜனதா கூட்டணியில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிறிய கட்சியான இந்திய குடியரசு (ஏ) கட்சியும் உள்ளது. எனினும் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய குடியரசு கட்சிக்கு தொகுதிகள் எதுவும் வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக அந்த கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது:-
கடந்த பிப்ரவரி மாதம் ஷீரடி, சோலாப்பூர் தொகுதிகளை எங்கள் கட்சிக்கு ஒதுக்குமாறு கேட்டு இருந்தேன். ஆனால் புதிய கூட்டணி கட்சிகளுக்கு அதிக முக்கியவதும் கொடுக்கப்படுகிறது. எங்கள் கட்சி 12 ஆண்டுகளாக பா.ஜனதாவில் கூட்டணியில் இருக்கும் போதும் புறக்கணிக்கப்படுகிறது.
2012-ம் ஆண்டு இந்திய குடியரசு கட்சி சிவசேனா-பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு அளித்த பிறகு மகாயுக்தி கூட்டணி உருவானது. ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் சேர்ந்ததால் இந்த கூட்டணி உருவாகவில்லை. எங்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்ற புகார் தொண்டர்களிடம் இருந்து வருகிறது.தொண்டர்களின் மனநிலை குறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசியுள்ளேன். சட்டசபை தேர்தலில் குறைந்தது 10 தொகுதியைும் கேட்போம்.
எங்கள் கட்சி பிரதமர் மோடிக்கு தீவிர ஆதரவை அளிக்கிறது. அதே நேரத்தில் கூட்டணியில் இந்திய குடியரசு கட்சி அவமதிக்கப்படுவதாக கட்சியினர் நினைக்கின்றனர். பா.ஜனதா கூட்டணி தேர்தல் பிரசார போஸ்டர்களில் பட்னாவிஸ், அஜித்பவார், ஏக்நாத் ஷிண்டே படத்துடன் எனது படம் பயன்படுத்தப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.