'தெற்கில் பா.ஜ.க.வின் வாக்கு சதவிகிதம் 2024 தேர்தலில் அதிகரிக்கும்' - பிரதமர் மோடி நம்பிக்கை


தெற்கில் பா.ஜ.க.வின் வாக்கு சதவிகிதம் 2024 தேர்தலில் அதிகரிக்கும் - பிரதமர் மோடி நம்பிக்கை
x
தினத்தந்தி 21 April 2024 5:37 AM GMT (Updated: 21 April 2024 12:25 PM GMT)

2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.விற்கு தென் இந்தியாவில் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தென் இந்திய மாநிலங்களை குடும்ப கட்சிகளும், ஊழல் நிறைந்த கட்சிகளும் ஆட்சி செய்து வருவதாகவும், 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.விற்கு தென் இந்தியாவில் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

"நீண்ட காலமாகவே பா.ஜ.க. என்பது உயர்சாதியினருக்கான கட்சி என்ற ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மந்திரிசபையில் உள்ள பெரும்பாலானோர் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள்.

பா.ஜ.க. ஒரு பழமைவாத கட்சி என்றும் கூறுகின்றனர். ஆனால் உலக அளவில் டிஜிட்டல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் கட்சி பா.ஜ.க.தான். எனவே, பா.ஜ.க.வைப் பற்றி கூறப்படும் இத்தகைய கருத்துக்கள் முற்றிலும் தவறானவை.

கடந்த 2019 மக்களவை தேர்தலில், தென் இந்தியாவில் தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்தது. தென் இந்திய மாநிலங்களை குடும்ப கட்சிகளும், ஊழல் நிறைந்த கட்சிகளும் ஆட்சி செய்து வருகின்றன. 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.விற்கு தென் இந்தியாவில் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும்."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story