நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய  அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

தென்காசியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார் .

தென்காசி,

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தீவிர பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் இவை அனைத்தும் நிறைவேற்றப்படும். சொன்னதை செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார். அதற்கு நீங்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

பிரதமர் மோடி தேர்தலுக்காக மட்டுமே தமிழ்நாட்டுக்கு வருகிறார். கடந்த தேர்தல்களின்போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை.5 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் எய்ம்ஸ்க்காக ஒற்றை செங்கலை நட்டு வைத்தனர். அதையும் நான் எடுத்துக்கொண்டு வந்து விட்டேன். ஆனால் அதன் பின்னர் பா.ஜ.க. ஆளும் 6 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. வரியாக 1 ரூபாய் செலுத்தினால் அதனை பிரித்து தமிழ்நாட்டிற்கு ரூ.29 பைசா மட்டுமே வழங்குகிறது. ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசத்திற்கு 3 ரூபாயும், பீகாருக்கு 7 ரூபாயும் வழங்குகிறது. இதனால் மத்திய பா.ஜ.க. அரசு நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. எனவே மாநிலங்களுக்கு நிதி உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அரசு அமையவும், தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் கைகாட்டும் நபர் பிரதமராக வருவதற்கு இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.


Next Story