இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்க திட்டம் - பிரதமர் மோடி


இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்க திட்டம் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 27 April 2024 6:32 PM GMT (Updated: 7 May 2024 10:58 AM GMT)

காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை பதவிக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

கோலாப்பூர்,

இந்தியா ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றால், ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கொரு பிரதமரை பதவியில் அமர்த்த திட்டமிடுவதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக மேற்கு மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் நடந்த பேரணியில் பேசிய பிரதமர் மோடி, "காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி தேர்தலில் மூன்று இலக்க எண்ணிக்கையை கூட எட்டாது, மேலும் ஆட்சியை அமைக்கும் வாசலை கூட நெருங்க முடியாது. ஆனால், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றால், ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கொரு பிரதமரை பதவியில் அமர்த்த திட்டமிடுகிறது.

கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் முதல்-மந்திரி பதவியை, அம்மாவட்டத்தின் துணை முதல்-மந்திரிக்கு மாற்றிக் கொடுக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதேபோலதான் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானிலும் இந்த ஏற்பாட்டைதான் செய்திருந்தது.

கர்நாடகாவில் ஒ.பி.சி.களின் 27 சதவீத இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களை இணைத்த மாதிரியை நாடு முழுவதும் விரிவாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சமூக நீதியை கொலை செய்ய சபதம் எடுத்துள்ளது.

தனது சமரச மற்றும் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் மிகவும் தாழ்வாக இறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி அரசியல் அமைப்பை மாற்ற முயற்சிக்கிறது மற்றும் மத ரீதியிலான இடஒதுக்கீட்டுக்காக தலித்துகள், ஒ.பி.சி. இடஒதுக்கிடு பலனைத் திருட முயற்சிக்கிறது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் அதன் கும்பாபிஷேகத்துக்கான அழைப்பையும் நிராகரித்தது. காங்கிரசின் இளவரசர் உங்களின் சொத்துகளை சோதனை செய்ய விரும்புகிறார். அதனை நாட்டின் வளத்தை பெறுவதற்கு முதல் உரிமை உள்ளதாக அக்கட்சி கூறியவர்களுக்கு பகிர்ந்தளிக்க விரும்புகிறார்.

காங்கிரஸ் கட்சி பரம்பரைச் சொத்து வரியை அமல்படுத்த விரும்புகிறது. அதன்மூலம் மக்களின் பரம்பரைச் சொத்தை திருட முயற்சிக்கிறது. அப்படிபட்டவர்கள் அதிகாரத்துக்கு வர சிறுவாய்ப்பு கூட அளிக்கக் கூடாது" என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் சட்டப்பிரிவு 370 திரும்பக் கொண்டுவரப்படும், பொது சிவில் சட்டம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. மோடியின் முடிவை யாராலும் மாற்ற முடியுமா..? அப்படி யாராவது மாற்றினால் அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று அவர்களுக்கு தெரியுமா..?" என்று பிரதமர் மோடி கூறினார்.


Next Story