'மக்களின் வாழ்க்கையை மாற்றி அவர்களுக்கு உதவ காங்கிரஸ் கட்சி விரும்புகிறது' - ராகுல் காந்தி


மக்களின் வாழ்க்கையை மாற்றி அவர்களுக்கு உதவ காங்கிரஸ் கட்சி விரும்புகிறது - ராகுல் காந்தி
x

தேர்தலில் வெற்றி பெற்றவுடன் 'மகாலட்சுமி' என்ற புதிய திட்டத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வர இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் பஸ்தார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"இந்தியாவில் 70 கோடி மக்களிடம் எவ்வளவு பணம் உள்ளதோ, அதே அளவு பணம் 22 நபர்களிடம் இருக்கிறது. அந்த 22 பேருக்காக பிரதமர் மோடி 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கிறார். நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும் பணவீக்கமும் உச்சத்தில் இருக்கிறது. ஆனால் எந்த ஊடகமாவது இந்த பிரச்சினைகளைப் பற்றி பேசுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

கொரோனா தொற்று காலத்தின்போது, ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் ஏராளமானோர் உயிரிழந்த சமயத்தில் பாத்திரங்களை தட்டுமாறு மக்களிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதுமட்டுமின்றி, மக்களை தங்கள் மொபைல் போன்களில் உள்ள டார்ச் லைட்டை அடிக்குமாறு கூறினார்.

மக்களின் வாழ்க்கையை மாற்றி அவர்களுக்கு உதவ காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. நரேந்திர மோடியால் கோடீஸ்வரர்களுக்கு பணம் கொடுக்க முடியும் என்றால், காங்கிரஸ் கட்சியால் அந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுக்க முடியும். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவுடன், 'மகாலட்சுமி' என்ற புதிய திட்டத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வர இருக்கிறது.

வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பெண்ணின் கணக்கில் மாதம் ரூ.8,500-ஐ செலுத்துவோம். இதன்படி ஓராண்டில் இந்தப் பெண்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் வழங்குவோம்."

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.


Next Story