டி.ஜி.பி. நியமனம்: மேற்கு வங்காள அரசுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு


டி.ஜி.பி. நியமனம்:  மேற்கு வங்காள அரசுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
x

டி.ஜி.பி. பதவிக்கு மேற்கு வங்காள அரசு பரிந்துரை செய்த 3 அதிகாரிகள் கொண்ட பட்டியலில் 2-வது நபராக முகர்ஜி இடம் பெற்றுள்ளார்.

கொல்கத்தா,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இதன்படி, நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையாளர்களான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதன்படி, குஜராத், உத்தர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாசல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த உள்துறை செயலாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதனுடன், மேற்கு வங்காள டி.ஜி.பி.யும் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, அந்த பதவிக்கு விவேக் சஹாய் நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை மேற்கு வங்காள அரசு வெளியிட்டது.

இந்நிலையில், டி.ஜி.பி. பதவியில் இருந்து விவேக் சஹாயை தேர்தல் ஆணையம் இன்று நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சஹாயை அந்த பதவிக்கு பணியமர்த்தும் முடிவு மேற்கொள்ளப்பட்ட 24 மணிநேரத்தில், அவருக்கு பதிலாக சஞ்சய் முகர்ஜியை டி.ஜி.பி.யாக நியமிக்கும்படி, மேற்கு வங்காள அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

வயது மூப்பின் அடிப்படையில், சஹாயின் நியமனம் அமைந்தது. ஆனால், மக்களவை தேர்தல் முடிவடைவதற்கு முன்பாக, மே மாத இறுதி வாரத்தில் அவர் ஓய்வு பெற உள்ளார். இதனால், மேற்கு வங்காள டி.ஜி.பி.யாக முகர்ஜியின் பெயர் கூறப்பட்டது என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

டி.ஜி.பி. பதவிக்கு மேற்கு வங்காள அரசு பரிந்துரை செய்த 3 அதிகாரிகள் கொண்ட பட்டியலில் 2-வது நபராக முகர்ஜி இடம் பெற்றுள்ளார். அவர், 1989-ம் ஆண்டை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியாவார். உடனடியாக முகர்ஜியின் பணி நியமனம் பற்றி உறுதி செய்து இன்று மாலைக்குள் அதுபற்றி தெரிவிக்கும்படி தேர்தல் ஆணையம் மேற்கு வங்காள அரசிடம் கேட்டு கொண்டுள்ளது.

1 More update

Next Story