"பிரதமர் மோடி பயன்படுத்தும் வார்த்தைகளைக் கண்டு மயங்கி விடாதீர்கள்" - பிரியங்கா காந்தி


பிரதமர் மோடி பயன்படுத்தும் வார்த்தைகளைக் கண்டு மயங்கி விடாதீர்கள் - பிரியங்கா காந்தி
x

கோப்புப்படம்

மோடி அரசு வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று பிரியங்கா காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.

டேராடூன்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகர், ரூர்க்கி மற்றும் ஹரித்துவார் நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி தனது தேர்தல் உரைகளில் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கண்டு மயங்கி விடாதீர்கள். வாக்களிக்கும் முன், 10 ஆண்டுகால மோடி அரசு உங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறதா என்பதை நீங்களே எடைபோட்டு பாருங்கள். இந்த தேர்தலில் மாற்றத்துக்காக வாக்களியுங்கள்.

காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலேயே இல்லை. ஆனால் இன்னும் எத்தனை நாள்தான் காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டுவீர்கள். 75 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை என்றால், இன்று இருக்கும் ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி. போன்றவை வந்து இருக்குமா? நேரு ஆட்சியில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றால், சந்திரயான் திட்டம் சாத்தியம் ஆகியிருக்குமா..?

10 ஆண்டுகளாக முழு பலத்துடன் இருக்கும் பா.ஜனதா அரசு, அடுத்து 400 இடங்களுக்கு இலக்கு வைத்துள்ளது. சமையல் கியாஸ் விலை குறைந்து இருப்பதாக கூறுகிறார்கள். அதன் விலை உயர்ந்தது உங்கள் ஆட்சியில்தானே.

அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், கட்டுப்பாடற்ற பணவீக்கம் மற்றும் ஊழல்கள் ஆகியவைதான் இன்றையை முக்கிய பிரச்சினை.

மோடி அரசு வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. 2 கோடி இளைஞர்களுக்கு வேலைகள் மற்றும் ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்குகளிலும் ரூ.15 லட்சம் வைப்பு போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

இமாசலபிரதேச சட்டசபை தேர்தலின்போது, இமாசலபிரதேசத்தை தேவபூமி என்று பிரதமர் மோடி வர்ணித்தார். தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, சில மாதங்களுக்கு பிறகு, இயற்கை பேரழிவு ஏற்பட்டபோது, மாநில மக்களுக்கு நிவாரணமாக ஒரு பைசா கூட வழங்கவில்லை. அனைத்து நிவாரணங்களும் மாநில அரசு தனது சொந்த வளங்களில் இருந்து வழங்கப்பட்டது" என்று பிரியங்கா காந்தி கூறினார்.


Next Story