'பிரதமர் மோடியின் வாகன பேரணியை அரசியலாக்க வேண்டாம்' - வானதி சீனிவாசன்
பிரதமர் மோடியை பார்ப்பதற்கு வரும் லட்சக்கணக்கான மக்களை எதிர்கட்சியினர் பார்க்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
திருப்பூர்,
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், திருப்பூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து குன்னத்தூர் பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், பிரதமர் மோடியின் வாகன பேரணியை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "பிரதமரின் வாகன பேரணி குறித்து எதிர்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். வாகன பேரணியில் ஏதோ ஒரு புகைப்படத்தை எடுத்துவிட்டு பிரதமரை விமர்சிப்பதற்கு பதிலாக, அவரை பார்ப்பதற்கு வரும் லட்சக்கணக்கான மக்களை எதிர்கட்சியினர் பார்க்க வேண்டும்.
பிரதமர் மோடியின் மீதான அன்பை மக்கள் வெளிப்படுத்துவதை ஒவ்வொரு இடத்திலும் நாங்கள் பார்க்கிறோம். பா.ஜ.க.வை அழிப்போம் என திருமாவளவன் பல ஆண்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் சொல்லச் சொல்ல தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. யார், யாரை அழிக்கிறார்கள் என்பதை ஜூன் 4-ந்தேதி பார்க்கலாம் " என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.