'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாத சகாப்தம் புத்துயிர் பெறும் - யோகி ஆதித்யநாத்


இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாத சகாப்தம் புத்துயிர் பெறும் - யோகி ஆதித்யநாத்
x

'இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் பயங்கரவாத சகாப்தம் புத்துயிர் பெற்றுவிடும் என யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மற்றும் அக்பர்பூர் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;-

"பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடும் எனக்கூறி மக்களை அச்சுறுத்தி வரும் அதே காங்கிரஸ் கட்சிதான், அரசியலமைப்பில் மாற்றம் செய்து மக்களின் பேச்சுரிமையை நசுக்கியது. 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் பயங்கரவாத சகாப்தம் புத்துயிர் பெறும்.

பிரதமர் மோடி சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தி, எல்லைகளை பாதுகாத்து, வளர்ச்சியை துரிதப்படுத்தி, குடிமக்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானின் நலன்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது.

'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு பதிலாக, பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்று அவர்களை ஊக்குவித்தார்கள். அயோத்தி ராமர் கோவிலை கட்டுவதற்கு பல தடைகளை உருவாக்கினார்கள்.

2014-க்கு முன்னர் அப்பாவி மக்களும், ராணுவ வீரர்களும் பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தார்கள். ஆனால் பிரதமர் மோடியின் அரசு, பயங்கரவாதத்தை அதன் கருவிலேயே அழித்துவிடுவதால், அத்தகைய தாக்குதல்கள் தற்போது நடைபெறுவதில்லை. புதிய இந்தியா யாரையும் அச்சுறுத்தாது, ஆனால் யாராவது நம்மை அச்சுறுத்தினால் அவர்களை விட்டுவைக்காது."

இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

1 More update

Next Story