'அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதற்காக முதல் முறையாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது' - ராகுல் காந்தி

Image Courtesy : ANI
அரசியலமைப்பு சட்டத்தை காக்க முதல் முறையாக தேர்தல் நடக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
லக்னோ,
'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சியில் இணைந்து உத்தர பிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் ஜான்சி தொகுதியில் நடைபெற்ற பிரசார பேரணியில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் ராகுல் காந்தி பேசியதாவது;-
"முதன்முறையாக அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதற்காக தேர்தல் நடக்கிறது. ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், ஆதிவாசிகள், சிறுபான்மையினர் என யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கான உரிமைகளை இந்த அரசியலமைப்பு புத்தகம் வழங்கியுள்ளது. இந்த அரசியலமைப்பை காக்க அகிலேஷ் யாதவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி போராடுகிறது.
அரசியலமைப்பு சட்டம் அழிந்துவிட்டால் உங்கள் நில உரிமை, இடஒதுக்கீடு, பொதுத்துறை எல்லாம் இல்லாமல் போய்விடும். உலகில் எந்த சக்தியாலும் அரசியலமைப்பை அழிக்க முடியாது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., நரேந்திர மோடி ஆகியோர் இந்த அரசியலமைப்பு புத்தகத்தை அழிக்கவும், கிழிக்கவும், தூக்கி எறியவும் விரும்புகிறார்கள். ஜான்சி ராணியின் நிலத்தில் இருந்து நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன், இந்த அரசியலமைப்பை நரேந்திர மோடி அல்லது ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட யாராலும் அழிக்க முடியாது."
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.






