கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி கே.எஸ். ஈஸ்வரப்பா பா.ஜ.க.வில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம்


கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி கே.எஸ். ஈஸ்வரப்பா பா.ஜ.க.வில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம்
x

கர்நாடக சட்டசபை தேர்தலில் நிற்க வேண்டாம் என்ற கட்சியின் முடிவை ஈஸ்வரப்பா கடந்த ஆண்டு, ஏற்று கொண்டார்.

பெங்களூரு,

கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் கே.எஸ். ஈஸ்வரப்பா. கர்நாடக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு பா.ஜ.க. தலைமை நீக்கி உள்ளது.

சமீபத்தில், கர்நாடகாவின் சிவமொக்கா மக்களவை தொகுதியில் இருந்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் தன்னுடைய முடிவை அவர் வெளியிட்டார். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

அவருடைய மகன் கந்தேஷ் என்பவருக்கு ஹாவேரி மக்களவை தொகுதியில் போட்டியிட பா.ஜ.க.வில் சீட் மறுக்கப்பட்டது.

இந்த தேர்தலில், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் மற்றும் சிவமொக்கா மக்களவை தொகுதி எம்.பி.யான ராகவேந்திராவுக்கு எதிராக ஈஸ்வரப்பா போட்டியிட உள்ளார். சமீபத்தில் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடியின் புகைப்படம் ஒன்றை தன்னுடைய பிரசாரத்துக்கு அவர் பயன்படுத்தியதும் கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மோடியே எங்களுடைய தலைவர் என தொடர்ந்து கூறி வரும் அவர், அவருடைய புகைப்படங்களை பயன்படுத்த கூடாது என தன்னை தடுத்து நிறுத்த முடியாது என கூறி கோர்ட்டில் கேவியட் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருக்கிறார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் நிற்க வேண்டாம் என்ற கட்சியின் முடிவை ஈஸ்வரப்பா கடந்த ஆண்டு, ஏற்று கொண்டார். ஏனெனில், எடியூரப்பா உள்ளிட்ட கட்சி தலைமை அவரிடம், கந்தேஷ் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படும் என உறுதி கூறப்பட்டது.

இதனால், ஹாவேரி மக்களவை தொகுதியில் அவர் போட்டியிடுவார் என ஈஸ்வரப்பா எதிர்பார்த்திருந்தபோது, அந்த தொகுதியை கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு பா.ஜ.க. வழங்கியது. இது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சுயேச்சையாக போட்டியிடும் அவருடைய முடிவை அறிவித்த நிலையில், கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு அவர் நீக்கப்பட்டு உள்ளார்.


Next Story