2014-ம் ஆண்டில் நம்பிக்கையுடன் வந்தேன்; 2024-ல்... அசாமில் பிரதமர் மோடி பிரசாரம்
அடுத்த 5 ஆண்டுகளில், ஏழைகளுக்காக 3 கோடிக்கும் கூடுதலான புதிய வீடுகள் கட்டப்பட்டு, எந்தவித வேற்றுமையும் இன்றி, ஏழைகள் அனைவரும் அந்த வீடுகளை பெறுவார்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.
நல்பாரி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அசாமின் நல்பாரி நகரில் நடந்த பொது பேரணி ஒன்றில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார். இதனை முன்னிட்டு அசாமுக்கு வருகை தந்த அவரை முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா முறைப்படி வரவேற்றார்.
இதனை தொடர்ந்து பொது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடும் வெயிலையும் கவனத்தில் கொள்ளாமல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், ஆண், பெண் என பொதுமக்கள் பலரும் திரண்டிருந்தனர். இதன்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, அயோத்தி நகரில் உள்ள ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட குழந்தை ராமர் சிலையின் மீது சூரிய ஒளி இன்று பட்டு பிரகாசித்த நிகழ்வை குறிப்பிட்டு பேசினார்.
அப்போது அவர், பொதுமக்கள் அனைவரும் உங்களுடைய மொபைல் போனில் உள்ள ஒளியை ஒளிர செய்வோம் என்றும் கூறினார். தொடர்ந்து அவர், மோடியின் உத்தரவாதம் இன்று நாடு முழுவதும் சென்று கொண்டிருக்கிறது.
இதற்கு வடகிழக்கும் கூட ஒரு சாட்சியாகும். வடகிழக்கு பகுதிக்கு காங்கிரசால் பிரச்சனைகள் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தன. ஆனால், வளங்களுக்கான சாத்தியப்பட்ட பகுதிகளாக அதனை பா.ஜ.க. உருமாற்றியுள்ளது.
பிரிவினைவாதம் எனும் எரிகிற தீயில் காங்கிரஸ் எண்ணெய் ஊற்றி கொண்டிருந்தது. அமைதி மற்றும் பாதுகாப்புக்கான முயற்சிகளை மோடி மேற்கொண்டார். 60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாத விசயங்களை 10 ஆண்டுகளில் மோடி செய்துள்ளார் என்று பேசினார்.
2014-ம் ஆண்டு மோடி வந்தபோது, அவருடன் நம்பிக்கையை கொண்டு வந்தார். 2019-ம் ஆண்டில் அவர் கோட்பாட்டுடன் வந்தார். 2024-ம் ஆண்டில், மோடி தன்னுடன் உத்தரவாதங்களை கொண்டு வருவார் என்று பேசினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியானது, நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைய வேண்டும் என்று முடிவெடுத்து உள்ளது. அவர்கள் பெற தகுதியான வசதிகளை வழங்கவும் முடிவு செய்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில், ஏழைகளுக்காக 3 கோடிக்கும் கூடுதலான புதிய வீடுகள் கட்டப்படும். எந்தவித வேற்றுமையும் இன்றி, ஏழைகள் அனைவரும் அந்த வீடுகளை பெறுவார்கள் என்றார்.