'ராகுலை உங்களிடம் ஒப்படைக்கிறேன்; அவர் உங்களை ஏமாற்றமாட்டார்' - ரேபரேலியில் சோனியா காந்தி பேச்சு


ராகுலை உங்களிடம் ஒப்படைக்கிறேன்; அவர் உங்களை ஏமாற்றமாட்டார் - ரேபரேலியில் சோனியா காந்தி பேச்சு
x

ராகுல் காந்தி உங்களை நிச்சயம் ஏமாற்றமாட்டார் என ரேபரேலி மக்களிடம் சோனியா காந்தி தெரிவித்தார்.

லக்னோ,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியின் தாயாரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி, 20 ஆண்டுகள் எம்.பி.யாக பதவி வகித்துள்ளார்.

இந்த முறை மக்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடவில்லை. இந்நிலையில் ரேபரேலியில் இன்று சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இணைந்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது சோனியா காந்தி பேசியதாவது;-

"இந்திரா காந்தியும், ரேபரேலி மக்களும் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்களைத்தான் ராகுலுக்கும், பிரியங்காவுக்கும் நான் கற்றுக் கொடுத்தேன். அனைவரையும் மதிக்கவும், பலவீனமானவர்களை பாதுகாக்கவும், மக்களின் உரிமைகளுக்காக, அநீதிக்கு எதிராக பயமின்றி போராட வேண்டும் எனவும் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.

20 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்ற எனக்கு நீங்கள் வாய்ப்பளித்தீர்கள். இதுவே என் வாழ்வின் மிகப்பெரிய சொத்து. இப்போது நான் எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். ராகுல் காந்தியை உங்கள் மகனாக நினைத்துக் கொள்ளுங்கள். அவர் நிச்சயம் உங்களை ஏமாற்றமடையச் செய்ய மாட்டார்."

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.


Next Story