கமிஷனுக்காகவே 'இந்தியா கூட்டணி' கட்சியினர் உழைக்கிறார்கள்... பிரதமர் மோடி கடும் தாக்கு


கமிஷனுக்காகவே இந்தியா கூட்டணி கட்சியினர் உழைக்கிறார்கள்... பிரதமர் மோடி கடும் தாக்கு
x

உறுதியற்ற தன்மை மற்றும் நிச்சயமற்ற தன்மையின் மறுபெயர்தான் இந்தியா கூட்டணி என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

சஹாரன்பூர்,

உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூர் உள்ளிட்ட 8 தொகுதிகளில் வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே இந்த தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.

இந்த தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். சஹாரன்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர், காங்கிரஸ் கட்சியையும், இந்தியா கூட்டணியையும் கடுமையாக விமர்சித்தார்.

இதுதொடர்பான தனது பிரசார உரையில், "காங்கிரஸ் தனது ஆட்சிக்காலத்தில் கமிஷன் பெறுவதிலேயே கவனம் செலுத்தியது. ஆட்சிக்கு வந்தபிறகு கமிஷனுக்காகவே இந்தியா கூட்டணி கட்சிகளும் உழைத்துக்கொண்டிருக்கின்றன.

ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியும், மோடி அரசும் பணிகள் செய்வதில் கவனம் செலுத்துகிறது. நாங்கள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற விரும்புகிறோம், ஆனால் எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைப் பெற ஆசைப்படுகிறார்கள்.

உறுதியற்றதன்மை மற்றும் நிச்சயமற்ற தன்மையின் மறுபெயர்தான் இந்தியா கூட்டணி. அவர்களை நாட்டு மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 370-க்கு மேற்பட்ட இடங்களை பெறுவதை தடுக்க எதிர்க்கட்சி கூட்டணி போராடி வருகிறது. சமாஜ்வாடி கட்சி மணிக்கொரு முறை வேட்பாளர்களை மாற்றி வருகிறது. காங்கிரசிடமோ வேட்பாளர்களை கண்டுபிடிக்கவே முடியவில்லை. தாங்கள் வலுவாக இருப்பதாக கருதும் தொகுதிகளில் கூட காங்கிரசால் வேட்பாளரை நிறுத்த தைரியம் இல்லை.

ஒரு காலத்தில் சுதந்திரத்திற்காகப் போராடிய கட்சியாக காங்கிரஸ் இருந்தது. நாட்டின் மூத்த தலைவர்களும் அதனுடன் இணைந்திருந்தனர், ஆனால் இன்றோ, சுதந்திரத்திற்காகப் போராடிய காங்கிரஸ் பல தசாப்தங்களுக்கு முன்பே அழிந்து விட்டது என நாடு முழுவதும் ஒரே குரலில் மக்கள் கூறுகின்றனர்.

தற்போதைய காங்கிரசில் தேசிய நலனுக்கான கொள்கைகளோ, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான எந்த தொலைநோக்கு பார்வையோ இல்லை.

காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை, இன்றைய இந்தியாவின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களிலிருந்து தற்போதைய காங்கிரஸ் முற்றிலும் மாறுபட்டுவிட்டது என்பதை நிரூபித்துள்ளது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் முத்திரையைக் கொண்டுள்ளது. அத்துடன் அதன் ஒரு பகுதியில் இடதுசாரிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. இத்தகைய காங்கிரசால் 21-ம் நூற்றாண்டில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.

தேவி சாகும்பரி தேவியின் புண்ணிய பூமிதான் சஹாரன்பூர். சக்தியை வழிபடுவது நமது இயற்கையான ஆன்மிகப் பயணத்தின் ஒரு பகுதியாகும். ஆனால், இந்தியா கூட்டணியினர் தங்கள் போராட்டம் சக்திக்கு எதிரானது என்று கூறுகிறார்கள். சக்திக்கு எதிராகப் போராடுவது பற்றி எதிர்க்கட்சிக் கூட்டணி பேசுவது நாட்டின் துரதிர்ஷ்டம்" என்று பிரதமர் மோடி கூறினார்.


Next Story