'மீராவின் பக்தியும், ஜான்சி ராணியின் துணிச்சலும் கங்கனா ரனாவத்திடம் உள்ளது' - யோகி ஆதித்யநாத்
மீரா பாயின்வின் பக்தியும், ஜான்சி ராணியின் துணிச்சலும் கங்கனா ரனாவத்திடம் உள்ளது என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
சிம்லா,
இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் நடிகை கங்கனா ரனாவத்தை ஆதரித்து உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-
"கங்கனா ரனாவத்திடம் மீரா பாயின் பக்தி, மகாராணி பத்மினியின் புத்திசாலித்தனம் மற்றும் ஜான்சி ராணியின் துணிச்சல் ஆகியவை உள்ளன. திரைத்துறையில் பல்வேறு போராட்டங்களை கடந்து தனக்கான இடத்தை அவர் பிடித்துள்ளார். அவரது வெற்றியை வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இந்த தேர்தல் ராம பக்தர்களுக்கும், ராமரின் துரோகிகளுக்கும் இடையே நடைபெறும் தேர்தலாகும். ராமரின் துரோகிகள் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களாகவும், இந்தியாவின் அடையாளம் குறித்து கேள்வி எழுப்புபவர்களாகவும், வளர்ச்சியை தடை செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.
பிரதமர் மோடியின் தலைமையில் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. முந்தைய ஆட்சிக்காலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி நடைபெற்றன. பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தியதாக கூறி காங்கிரஸ் கட்சி அடிபணிந்து இருந்தது. ஆனால் இன்று சத்தமாக பட்டாசு வெடித்தால் கூட பாகிஸ்தானில் இருந்து உடனடியாக விளக்கம் கிடைக்கிறது."
இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.