தேர்தல் பத்திர ஊழலில் இருந்து திசை திருப்ப கெஜ்ரிவால் கைது; பினராயி விஜயன்


தேர்தல் பத்திர ஊழலில் இருந்து திசை திருப்ப கெஜ்ரிவால் கைது; பினராயி விஜயன்
x

தேர்தல் பத்திரங்கள் பற்றிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அவர்களுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும் என மத்திய அரசு, பா.ஜ.க. மற்றும் சங்பரிவார் அமைப்புகளுக்கு நன்றாக தெரியும் என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்,

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவாலை அமலாக்க துறை அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். இதற்கு இந்தியா கூட்டணி உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியானது 3-வது முறையாக கேரளாவில் நேற்று பேரணி நடத்தியது. இதில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டார்.

அவர் பேரணியில் கூடியிருந்த மக்களிடையே பேசும்போது, இந்தியா இதுவரை பார்த்திராத அளவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஊழலாக தேர்தல் பத்திரங்களில் செய்த ஊழல் பார்க்கப்படுகிறது. அதனால், மத்தியில் ஆளும் அரசு இந்த விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்ப டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை கைது செய்து உள்ளது என்று கூறினார்.

இதில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மற்றும் சங்பரிவார் அமைப்பை அவர் கடுமையாக சாடினார். நாட்டின் சட்ட விதிகளை குறைத்து மதிப்பிடுகிறது என்றும் அரசியல் சாசன அமைப்பின் கட்டுப்பாட்டை பறித்து கொள்ள சங்பரிவார் அமைப்பு முயற்சிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். நீதி அமைப்பை கூட அச்சுறுத்த பார்க்கின்றனர் என்றும் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

மத்திய அரசு, பா.ஜ.க. மற்றும் சங்பரிவார் அமைப்பு என அனைவருக்கும் தேர்தல் பத்திரங்கள் பற்றிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அவர்களுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும் என நன்றாக தெரியும். இந்த விவகாரத்தில் இருந்து கவனம் திரும்ப வேண்டும் என அவர்கள் நினைத்தனர். அதற்கு கெஜ்ரிவாலை அவர்கள் கைது செய்து விட்டனர் என கூறினார்.

தொடர்ந்து அவர், தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோதே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அது ஓர் ஊழல் கருவியாக செயல்படும் என கூறியதுடன், இந்த விவகாரம் பற்றி சுப்ரீம் கோர்ட்டிடம் கொண்டு சென்றோம் என்றும் கூறினார்.


Next Story