அமலாக்கத்துறை காவலில் கெஜ்ரிவால்... கடிதங்கள் அனுப்புவது பற்றி விசாரணை கோரியது பா.ஜ.க.


அமலாக்கத்துறை காவலில் கெஜ்ரிவால்... கடிதங்கள் அனுப்புவது பற்றி விசாரணை கோரியது பா.ஜ.க.
x
தினத்தந்தி 27 March 2024 8:32 AM GMT (Updated: 27 March 2024 11:10 AM GMT)

கெஜ்ரிவால் அவருடைய மந்திரிகளுக்கு அனுப்பிய கடிதங்கள் எல்லாம் உண்மை தன்மை கொண்டவையா? என விசாரிக்க வேண்டும் என்று டெல்லி பா.ஜ.க. தலைமை கோரியுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் ஆட்சி நடந்து வருகிறது. இதில், டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த வியாழக்கிழமை அமலாக்கத்துறை குழுவினர், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். 2 மணிநேர சோதனை மற்றும் விசாரணைக்கு பின்னர், அமலாக்க பிரிவு அதிகாரிகள் கெஜ்ரிவாலை அன்றிரவு கைது செய்தனர். நாட்டில், முதல்-மந்திரியாக இருக்கும்போது, ஒருவர் கைது செய்யப்படுவது என்பது முதல் முறையாகும். மக்களவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இந்த கைது நடவடிக்கையானது அரசியலில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைக்கு, அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, ராகுல் காந்தி, சரத் பவார், பிரியங்கா காந்தி, மு.க. ஸ்டாலின், சசி தரூர் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் பலரும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்தனர். இதற்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என ஆம் ஆத்மி தெரிவித்தது. அவருக்கு 28-ந்தேதி வரை அமலாக்க துறை காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

எனினும், சிறையில் இருந்தபடி கெஜ்ரிவால் அரசை வழிநடத்துவார் என மந்திரி அதிஷி கூறினார். இந்நிலையில், அமலாக்க துறை காவலில் இருந்தபடி கெஜ்ரிவால் கடந்த ஞாயிற்று கிழமையன்று, தனது முதல் உத்தரவை வெளியிட்டார். இந்த உத்தரவானது, நீர் அமைச்சகத்துடன் தொடர்புடையது என மந்திரி அதிஷி கூறினார்.

இந்நிலையில், அமலாக்க துறை காவலில் உள்ள கெஜ்ரிவால் நேற்று 2-வது முறையாக உத்தரவு ஒன்றை வெளியிட்டார். அரசால் நடத்தப்படும் மொகல்லா கிளினிக்குகளில் இலவச மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் செய்வது பற்றிய உத்தரவை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

கெஜ்ரிவாலின் இந்த கடிதங்களுக்கு பா.ஜ.க.வினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதுபற்றி டெல்லி பா.ஜ.க. தலைமையிலான குழுவினர் ஒன்றாக சென்று, காவல் ஆணையாளர் சஞ்சய் அரோராவிடம் இன்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில், அமலாக்க துறை காவலில் உள்ள கெஜ்ரிவால் அவருடைய மந்திரிகளுக்கு கடிதங்களை அனுப்பி வருவது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இதுபற்றி டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, டெல்லி காவல் தலைமையகத்தில் அரோராவை எங்களுடைய குழுவினர் சந்தித்தோம்.

இந்த சந்திப்பில், கெஜ்ரிவால் அனுப்பிய இந்த கடிதங்கள் எல்லாம் உண்மை தன்மை கொண்டவையா? என்றும் அவற்றை பெற்று கொண்ட மந்திரிகள் அதிஷி மற்றும் சவுரப் ஆகியோரின் பங்கு பற்றியும் விசாரிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறோம் என்றார்.

அமலாக்க துறை காவலில் உள்ள ஒருவரிடம் இருந்து வரும் இதுபோன்ற கடிதங்கள் முறையாக, உயரதிகாரிகளின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. எனக்கு தெரிந்தவரை, இந்த கடிதங்கள் போலியானவை என கூறியுள்ளார்.


Next Story