வாக்குப்பதிவு நாளின் ஒவ்வொரு நொடியும் நமக்கானது என்பதை உணர்ந்து பணியாற்றுவோம் - டி.டி.வி. தினகரன்
வாக்குச்சாவடி முகவர்களும், கழக நிர்வாகிகளும் கவனத்துடனும் விழிப்புடனும் செயல்பட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளே! தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளைய தினம் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் தொடங்கி பிரசாரம் நிறைவடையும் வரை கழகத்தின் அனைத்து நிலையிலான நிர்வாகிகளும், தொண்டர்களும் தேனீக்களாக தேர்தல் பணியாற்றியதை நன்கு அறிவேன். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு என ரத்தத்தை வியர்வையாய் சிந்தி நீங்கள் அனைவரும் அல்லும் பகலும் அயராது மேற்கொண்ட களப்பணிகள் அனைத்திற்கும் தீர்வு காணக்கூடிய நாள் நெருங்கிவிட்டது.
வாக்குப்பதிவின் போது பொதுமக்கள் அனைவரும் தங்களின் ஜனநாயகக் கடமையை சுதந்திரமாக ஆற்றுவதற்கு தேவையான சூழலை ஏற்படுத்தித் தருவதோடு, தோல்வி பயத்தின் காரணமாக நமக்கு எதிரானவர்களின் அராஜக, அத்துமீறல்களுக்கு கிஞ்சித்தும் இடமளிக்காத வகையில் வாக்குச்சாவடி முகவர்களும், கழக நிர்வாகிகளும் கவனத்துடனும் விழிப்புடனும் செயல்பட வேண்டும்.
வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்தில் இருந்து வாக்குப்பதிவு முழுமை பெற்று, இயந்திரங்கள் சீலிட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்படும் இறுதி நேரம் வரை முகவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கண் துஞ்சாது பணியாற்ற வேண்டும்.
அதே போல, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பணியாற்றும் வாக்குச் சாவடி முகவர்களும், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.