களப்பணி செய்வோம்... வெற்றிகளை கைமேல் குவிப்போம் - அன்புமணி ராமதாஸ்


களப்பணி செய்வோம்... வெற்றிகளை கைமேல் குவிப்போம் - அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 22 March 2024 8:28 AM GMT (Updated: 22 March 2024 11:45 AM GMT)

தமிழ்நாட்டில் பா.ம.க. ஆட்சி என்பதை நனவாக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் தொடங்கி விட்டது. தேர்தலை எதிர்கொள்ள எப்போதோ தயாராகி விட்ட நாம், பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களத்தில் இறங்கியிருக்கிறோம். இந்த விவரங்கள் அனைத்தையும் எனது அண்ணன்கள், தம்பிகள், சகோதரிகளாகிய உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. களத்தில் சிங்கங்களாய் துடிப்புடன் நீங்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதே அதற்கு எடுத்துக்காட்டு.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான உங்களில் பலரின் எதிர்பார்ப்புகளுக்கும், தலைமையின் முடிவுக்கும் இடையே சிறிய இடைவெளி இருந்தது உண்மை தான். ஆனால், அய்யா எடுக்கும் எந்த முடிவுக்கும் பின்னால் ஒரு பொருள் இருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்த வினாடியே அந்த இடைவெளி நிரப்பப்பட்டு விட்டது. டாக்டர் ராமதாஸின் முடிவே எங்களின் முடிவு என்பதை அறிவித்து நீங்கள் களப்பணியை தொடங்கி விட்ட செய்திகள் மலைமலையாய் குவிந்து மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டுள்ளன.

ஓர் அரசியல் தலைவரின் எந்த முடிவும் தொலைநோக்கு கொண்டதாக இருக்க வேண்டும். 44 ஆண்டுகளுக்கு முன் மருத்துவர் அய்யா அவர்கள் பொதுவாழ்க்கைக்கு வந்தது முதல் இன்று வரை மருத்துவர் அய்யா அவர்கள் எடுத்த முடிவுகள் அனைத்துமே அப்படிப்பட்டவையாகத் தான் இருக்கின்றன. மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் முடிவும் அத்தகைய ஒன்று தான்.

கூட்டணி குறித்த முடிவு மக்களவைத் தேர்தலை மட்டும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக் கூடாது; அடுத்து 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையும் மனதில் கொண்டு தான் இருக்க வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடு. இதை கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நான் கூறியிருக்கிறேன். அந்த நிலையில் எந்த மாற்றமுமில்லை.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கம் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கு தானே தவிர, அதிமுகவையும், திமுகவையும் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்ப்பதற்கு அல்ல என்பதுதான் டாக்டர் ராமதாஸ் நமக்கு சொல்லிக் கொடுத்த பாடம் ஆகும். அதை மனதில் கொண்டு தான் இப்போது கூட்டணி அமைத்திருக்கிறோம்.

2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது. அதற்கான செயல்திட்டத்தின் ஓர் அங்கம் தான் இன்றையத் தேர்தல் கூட்டணி ஆகும். தமிழ்நாட்டில் சமூகநீதிக்கான தலைவர் டாக்டர் ராமதாஸ்தான். அவர் தான் பல்வேறு போராட்டங்களை நடத்தி தேசிய அளவிலும், மாநில அளவிலும் 6 வகையான இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்துக் கொடுத்தார்.

அவரது கனவான தமிழ்நாட்டில் பா.ம.க. ஆட்சி என்பதை நனவாக்க வேண்டும். இந்த உண்மையை எனது அண்ணன்கள், தம்பிகள், அக்காக்கள், தங்கைகள் உள்ளிட்ட அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். உங்களின் உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன். உங்களின் உணர்வுகளுக்கு எதிராக எந்த முடிவையும் நான் இதுவரை எடுத்ததில்லை; இனியும் எடுக்க மாட்டேன்.

இந்தியாவின் மிக உயர்ந்த அரசியல் தலைவரும், சமூகநீதிப் போராளியும் டாக்டர் ராமதாஸ்தான். தமிழ்நாட்டிற்கு நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துத் தர வேண்டும் என்ற கடமை பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு முன்பாக, மிகவும் முக்கியமான 2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கும், நம்முடன் கூட்டணி அமைத்திருக்கும் பாரதிய ஜனதா உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் வெற்றி தேடித்தர வேண்டியது கட்டாயம் ஆகும்.

இதை உணர்ந்து, ஏப்ரல் 19-ம் நாள் நடைபெறவுள்ள வாக்குப்பதிவை மனதில் கொண்டு வேட்கையுடன் களப்பணியாற்றுவோம்; அதன் பயனாக வெற்றிகளைக் குவிப்போம், வாருங்கள் சொந்தங்களே!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story