நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- கடலூர்


நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- கடலூர்
x
தினத்தந்தி 4 April 2024 9:15 AM GMT (Updated: 4 April 2024 9:15 AM GMT)

17 நாடாளுமன்ற பொதுத்தேர்தல்களை சந்தித்துள்ள கடலூர் தொகுதியில் அதிக முறை வென்ற கட்சியாக காங்கிரஸ் உள்ளது.

ங்க கடற்கரையையொட்டி அமைந்துள்ளது கடலூர் நாடாளுமன்ற தொகுதி. இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் தென் இந்தியாவின் முதல் தலைநகரமாக விளங்கியது இந்நகரம் தான். அவர்களது ஆட்சிக்காலத்தில் கப்பல் வழி வாணிபம் இங்கு மிகுந்து காணப்பட்டது. அதோடு, மத்திய அரசின் மிகப்பெரிய நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனம், முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்துக்கு புகழ்பெற்ற பண்ருட்டி என்று இதன் சிறப்புகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

தொகுதி மறு சீரமைப்பு

இந்த தொகுதி 1951-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி இருந்தது. 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது, உளுந்தூர்பேட்டை தொகுதி விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியிலும், ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியிலும் சேர்க்கப்பட்டன.

அதற்கு பதிலாக முன்பு சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்த குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகள் கடலூர் நாடாளுமன்ற தொகுதியோடு இணைக்கப்பட்டது. தற்போது கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுடன் கடலூர் நாடாளுமன்ற தொகுதி உள்ளது.

காங்கிரஸ் கோட்டை

இதுவரை 17 நாடாளுமன்ற பொதுத்தேர்தல்களை சந்தித்துள்ள கடலூர் தொகுதியில் அதிக முறை வென்ற கட்சியாக காங்கிரஸ் உள்ளது. அதாவது 7 முறை காங்கிரஸ் கையில் இந்த தொகுதி இருந்தது. அதற்கு அடுத்தபடியாக தி.மு.க. 5 முறையும், அ.தி.மு.க. 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ், உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் சுயேச்சை ஆகியோர் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதாவது, 1951-ம் ஆண்டு தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட கோவிந்தசாமி கச்சிராயர் வெற்றி பெற்றார். 1957-ம் ஆண்டு தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட முத்துக்குமாரசாமி வெற்றி வாகை சூடினார். 1962-ம் ஆண்டு (தி.மு.க.) ராமபத்ரன், 1967-ம் ஆண்டு (தி.மு.க.) வி.கே. கவுண்டர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அதன்பின்னர் தொடர்ச்சியாக 5 முறை காங்கிரஸ் கோட்டையாக இத்தொகுதி இருந்தது. அக்கட்சியை சேர்ந்த (1971) ராதாகிருஷ்ணன், (1977) பூவராகவன், (1980) முத்துக்குமரன், (1984) பி.ஆர்.எஸ். வெங்கடேசன், (1991) கலியபெருமாள் ஆகியோர் அடுத்தடுத்து தங்களது வெற்றியை பதிவு செய்தனர்.

1996-ல் பி.ஆர்.எஸ். வெங்கடேசன் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். (1998) அ.தி.மு.க.வை சோ்ந்த எம்.சி. தாமோதரன், (1998) தி.மு.க. ஆதிசங்கர், (2004) தி.மு.க. வேங்கடபதி, (2009) காங்கிரஸ் கே.எஸ். அழகிரி, (2014) அ.தி.மு.க. அருண்மொழிதேவன் ஆகியோரும் வெற்றிபெற்றனர்.

தி.மு.க. வெற்றி

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் 5 லட்சத்து 22 ஆயிரத்து 160 வாக்குகளும், அவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிட்ட கோவிந்தசாமி 3 லட்சத்து 78 ஆயிரத்து 177 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் 1 லட்சத்து 43 ஆயிரத்து 983 வாக்குகள் வித்தியாசத்தில் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் வெற்றி பெற்றார்.

தொகுதியில் வன்னியர் சமுதாயத்தினர் 36.8 சதவீதம், ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் 34 சதவீதம், முஸ்லிம் சமுதாயத்தினர் 4 சதவீதம், நாயுடு சமுதாயத்தினர் 3.25 சதவீதம், முதலியார் 2.80 சதவீதம், யாதவர் 2.70 சதவீதம், கிறிஸ்தவர்கள் 1.70 சதவீதம், இதர சமுதாயத்தினர் 14.75 சதவீதம் பேர் உள்ளனர்.

கப்பல், ரெயில், விமான போக்குவரத்து

துறைமுகம் மூலம் ஆங்கிலேயர்கள் காலத்தில் பெரும் வணிக களமாக இருந்த கடலூர், இன்று பின் தங்கிய பகுதியாகவே இருக்கிறது. துறைமுகமும் மெச்சும் வகையில் செயல்பாட்டில் இல்லை. இது ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்துக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. தென்னக ரெயில்வேயின் மெயின் ரெயில் பாதை கடலூர் வழியாக செல்கிறது. புதிய ரெயில்கள் அறிவிப்பதில் இந்த வழித்தடத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. குறிப்பாக கடலூர்- புதுச்சேரி- சென்னை ரெயில் வழித்தட பணிகள் மந்த நிலையில் இருக்கிறது.

அதோடு கடலூர் என்ற பெயரில் ரெயில் நிலையம் இல்லாமல் இருப்பது பெரும் குறையாக இருக்கிறது. நெய்வேலி சிறு விமான நிலையத்தையும் பயன்பாட்டுக்கு கொண்டுவருவது ஆகியன நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது.

தொகுதியில், விவசாயிகளும், அதற்கு அடுத்ததாக மீனவர்களும் நிறைந்துள்ளனர். இதில் மீனவர்களின் பிரச்சினையாக தாழங்குடாவில் தூண்டில் வளைவு அமைப்பது, முகத்துவாரத்தை ஆழப்படுத்துவது போன்றவை நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது.

காவிரி-வெள்ளாறு இணைப்பு

விவசாயிகளுக்கு விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லை, கரும்புக்கான உரிய விலை கிடைக்கவில்லை. பண்ருட்டி முந்திரிக்கு உரிய விலை கிடைக்கவில்லை, முந்திரி ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படவில்லை. பலா விவசாயிகளுக்கு, பலா பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கு, பலாவில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்டு தயாரிக்கப்படும் ஜூஸ் வகைகள், சிப்ஸ் உள்ளிட்டவைகளை தயாரிக்க முறையான பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

அதேபோன்று மிகப்பெரிய ஏரியான வெலிங்டன் ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால், காவிரி- வெள்ளாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி நீர்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு

விருத்தாசலத்தில் செராமிக் கல்லூரி மேம்பாட்டு திட்டம், சூரியகாந்தி எண்ணெய் பிழியும் ஆலை திட்டம் போன்ற எந்தவொரு திட்டமும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இப்பகுதியில் வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு அதிகளவில் இளைஞர்கள் செல்கிறார்கள். இவர்களுக்கான வேலைவாய்ப்பை உள்ளூரில் இதுவரைக்கும் யாரும் உருவாக்கி கொடுக்கவில்லை.

திட்டக்குடி பகுதி மக்களின் 50 ஆண்டு கனவான சிப்காட் தொழிற்சாலை அமைத்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிறுநீரக பிரிவுக்கு என தனி டாக்டர் நியமிக்க வேண்டும்.

என்.எல்.சி. பிரச்சினைகள்

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு மாற்று இடம், உரிய இழப்பீடு, வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை தொடர்கிறது. அதேபோல் வேலைவாய்ப்பில் உள்ளூர் வாசிகளுக்கு முக்கியத்துவம், ஒப்பந்த தொழிலாளர்களின் பணிநிரந்தரம், என்.எல்.சி.யின் பங்கு விற்பனை பிரச்சினை என என்.எல்.சியை மையமாக கொண்ட பல பிரச்சினைகளுக்கும் இதுவரை தீர்வு எட்டப்படாமல் இருக்கிறது. இதேபோன்று கடலூரில் சிப்காட் பகுதி இருந்தாலும் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. இப்படி தீர்க்கப்படாத பிரச்சினைகளை, கோரிக்கைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கடல் வளம், நிலக்கரி வளம் மற்றும் விவசாய வளங்கள் குவிந்து வளர்ச்சிப்பாதைக்கான அத்தனை வாய்ப்புகளும் இத்தொகுதியில் நிறைந்து இருந்தாலும், வளர்ச்சிக்கான கதவுகள்தான் இன்னும் திறக்கப்படாமலேயே இருக்கிறது.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருக்கும் 6 சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:-

கடலூர் சட்டமன்ற தொகுதி (தி.மு.க. வெற்றி)

கோ. அய்யப்பன் (தி.மு.க.).- 84,563

எம்.சி.சம்பத் (அ.தி.மு.க.)- 79,412

கடல் தீபன் (நாம் தமிழர்)-9563

ஆனந்தராஜ் (மக்கள் நீதி மய்யம்)- 4040

ஞானபண்டிதன் (தே.மு.தி.க.) -1499

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி (தி.மு.க. வெற்றி)

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (தி.மு.க.) -1,01681

செல்விராமஜெயம் (அ.தி.மு.க.) -84,232

சுமதி (நாம் தமிழர்). -8,520

வசந்தகுமார் (அ.ம.மு.க.). - 840

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி (த.வா.க. வெற்றி )

வேல்முருகன் (த.வா.க.)- 92373

சொரத்தூர் ராஜேந்திரன் (அ.தி.மு.க.). - 87628

சுபாஷினி (நாம் தமிழர்)..-6547

சிவக்கொழுந்து (தே.மு.தி.க.) - 3337

ஜெய்லானி (மக்கள் நீதி மய்யம்) - 1656

நெய்வேலி சட்டமன்ற தொகுதி (தி.மு.க. வெற்றி)

சபா. ராஜேந்திரன் (தி.மு.க.)..- 75,177

ஜெகன் (பா.ம.க.) - 74200

ரமேஷ் (நாம் தமிழர்)- 7785

பக்தரட்சகன் (அ.ம.மு.க.) - 2230

இளங்கோவன் (ஐ.ஜே.கே.).- 1011

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி (தி.மு.க. வெற்றி)

சி.வி. கணேசன் (தி.மு.க.) - 83,726

பெரியசாமி (பா.ஜனதா) - 62,163

காமாட்சி (நாம் தமிழர்) -10591

உமாநாத் (தே.மு.தி.க.). -4142

பிரபாகரன் (மக்கள் நீதி மய்யம்). - 1745

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி (காங்கிரஸ் வெற்றி)

எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்)-77064

கார்த்திகேயன் (பா.ம.க.)- 76202

பிரேமலதா விஜயகாந்த் (தே.மு.தி.க.)- 25,908

அமுதா (நாம் தமிழர் கட்சி) - 8642

பார்த்தசாரதி (ஐ.ஜே.கே.) - 841

வெற்றி யார் கையில்?

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 4 தொகுதிகளில் தி.மு.க.வும், 2 தொகுதியில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ், த.வா.க. ஆகியன வெற்றி பெற்று இருக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் வெற்றி பெற்றார்.

இதனால் சிட்டிங் தொகுதியாக இருந்தும் கடலூர் தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அக்கட்சியின் வேட்பாளராக விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். இவர் ஆரணி தொகுதி எம்.பி.யாக உள்ளார். செய்யாறு சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளராக சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2011-ம் ஆண்டு இருந்தார். 2021-ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது மீண்டும் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். நடிகா், இயக்குனர், ஒளிப்பதிவாளர் என பன்முக திறமை கொண்ட இவர் சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளார். அரசியல் புதிது என்றாலும் அது சார்ந்த படைப்புகளை படைத்துள்ளார். மேலும் தன்னுடைய அனுபவம், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு களம் காண்கிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மணிவாசகன் போட்டியிடுகிறார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர் அரசியலுக்கு வந்துள்ளார். இவர் தேர்தல் தேதி அறிவித்தது முதல் தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். இது தவிர பல்வேறு வேட்பாளர்களும் வெற்றியை நோக்கி பயணித்து வருகின்றனர்.

மேலும் இத்தொகுதியை பொறுத்தவரையில் கூட்டணி கட்சிகளின் பலம் தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறது என்பதே கடந்த கால வரலாறு. அதேவேளையில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் 41 ஆயிரத்து 673 வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்க இருக்கிறார்கள். இவர்களும் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியில் ஒன்றாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.


Next Story