நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- பெரம்பலூர்


நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- பெரம்பலூர்
x

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1951-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 17 முறை நாடாளுமன்ற தேர்தல்களை பெரம்பலூர் தொகுதி சந்தித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 25-வது தொகுதியாக பெரம்பலூர் உள்ளது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் முன்பு பெரம்பலூர் (தனி), உப்பிலியபுரம் (தனி), வரகூர் (தனி), அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்று இருந்தன. ஆனால் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2009-ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி வரகூர் சட்டமன்ற தொகுதி குன்னம் தொகுதியாக மாற்றப்பட்டது. ஆண்டிமடம், உப்பிலியபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் நீக்கப்பட்டன. அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்ற தொகுதியும் சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் சேர்க்கப்பட்டன.

பெரம்பலூர் (தனி), கரூர் மாவட்டத்தை சேர்ந்த குளித்தலை, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடி, முசிறி, முசிறியில் இருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மண்ணச்சநல்லூர் மற்றும் துறையூர் (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்றுள்ளன. முன்பு தனி தொகுதியாக இருந்த பெரம்பலூர் மறுசீரமைப்புக்கு பின் பொது தொகுதியாக மாறியது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் முத்தரையர் சமூகத்தினர் அதிக அளவில் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஆதிதிராவிடர், உடையார், ரெட்டியார், செட்டியார், யாதவர், நாயுடு, வன்னியர், பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் உள்ளனர். பெரும்பான்மையாக இந்துக்கள் உள்ளனர். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் வசிக்கின்றனர்.

1951-ம் ஆண்டு முதல் தேர்தல்

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1951-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 17 முறை நாடாளுமன்ற தேர்தல்களை பெரம்பலூர் தொகுதி சந்தித்துள்ளது. 1951-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை சேர்ந்த பூவராகசாமி படையாச்சி, இந்த தொகுதியில் முதல் வெற்றியை பதிவு செய்தார். 1957-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசை சேர்ந்த பழனியாண்டி வெற்றி பெற்றார். 1962-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த செழியன் வெற்றி பெற்றார்.

1967, 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த துரைராசு வெற்றி வாகை சூடினார். 1977-ம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற தேர்தலை அ.தி.மு.க. சந்தித்த நிலையில், பெரம்பலூர் தொகுதியில் அக்கட்சியை சேர்ந்த அசோக்ராஜ் வெற்றி பெற்றார். 1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசை சேர்ந்த மணி வெற்றி பெற்றார். 1984, 1989-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க.வை சேர்ந்த தங்கராசு வெற்றிக்கனியை ருசித்தார். 1991-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க.வை சேர்ந்த அசோக்ராஜ் வெற்றி பெற்றார். 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா வென்றார்.

1998-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த ராஜரத்தினம் வெற்றி பெற்றார். 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசாவே வென்றார். 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நடிகர் நெப்போலியனும், 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஆர்.பி.மருதராஜாவும் வென்றனர். 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர் வெற்றி பெற்றார்.

தீர்க்கப்படாத பிரச்சினை

விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள பகுதிகளை உள்ளடக்கியது பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி. சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி போன்றவற்றின் உற்பத்தியில் பெரம்பலூர் மாநில அளவில் முதல் வரிசையில் இடம் பிடித்து பெருமை சேர்க்கிறது. விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழிலை கொண்டுள்ள பெரம்பலூர் தொகுதியில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. ஒவ்வொரு முறையும் எம்.பி. தேர்தலில் போட்டியிடுபவர்கள், நான் வெற்றி பெற்றால், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சின்ன வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் ஆகியவற்றில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்க தொழிற்சாலைகள் தொடங்கப்படும் என்று கூறுகின்றனர். ஆனால் இதுவரை யாராலும் தொடங்கப்படவில்லை.

காய்கறி-பழங்களுக்கான குளிர்பதன கிடங்கு அமைக்கப்படவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டம் கடந்த 14 ஆண்டுகளாக அரசியல் காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசு பொறியியல், வேளாண்மை கல்லூரிகளும் அமைக்கப்படவில்லை. பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று திகழும் பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படவில்லை. பெரம்பலூர் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படவில்லை. அதற்கான கையகப்படுத்தப்பட்ட நிலத்தினை விவசாயிகளுக்கு இதுவரை திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டினை தீர்க்க கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்தப்படவில்லை.

ரெயில் சேவை இல்லாத பெரம்பலூர்

தமிழகத்தில் ரெயில் சேவை இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் உள்ளது. ஏற்கனவே பெரம்பலூர் தொகுதியில் எம்.பி.யாக இருந்த ஆ.ராசா, மருதராஜா ஆகியோர், இப்பகுதியில் ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படவில்லை. தற்போதைய எம்.பி. பாரிவேந்தர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில் அரியலூருக்கும், நாமக்கல்லுக்கும் இடையே பெரம்பலூர், துறையூர், தா.பேட்டை வழியாக 116.26 கிலோ மீட்டர் புதிய ரெயில் பாதைக்கான இறுதி கட்ட ஆய்வு, கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஆய்வு பணிகள் முடிந்து, அதன் முடிவுகள் உறுதியான பிறகு திட்டம் செயல்படுத்தப்படுவது பற்றிய முடிவு சாத்தியமாகும் என்று கூறப்பட்டு வருகிறது.

கோரிக்கைகள்

இதேபோல் விவசாய பாசனத்துக்காக முசிறியில் இருந்து பெரம்பலூருக்கு காவிரி நீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பெரம்பலூரில் சின்ன வெங்காயம், மக்காச்சோளத்துக்கு ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். குளித்தலையில் வாழை ஆராய்ச்சி நிலையமும், முசிறியில் வாழைக்காய் பதப்படுத்தக்கூடிய சேமிப்பு கிடங்குகளையும் அமைக்க வேண்டும். லால்குடி ரெயில் நிலையத்தில் நின்று செல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்களை நின்று செல்வதற்கும், ரெயில்வே சுரங்கப்பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நவீன அரிசி ஆலைகள் நிறைந்துள்ள மண்ணச்சநல்லூரை பாதுகாக்கப்பட்ட உணவு மண்டலமாக அறிவிக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையிலும், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகளையும், மத்திய-மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு பயிற்சி மையங்களையும், தொகுதியில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தொடங்க வேண்டும். முசிறி காவிரியில் நிரந்தர தடுப்பணை அமைக்க வேண்டும். துறையூரில் முந்திரி தொழிற்சாலையும், பச்சைமலையில் மத்திய அரசின் சைனிக் பள்ளியும் தொடங்க வேண்டும். குளித்தலை பகுதியில் 1,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள பஞ்சப்பட்டி ஏரிக்கு மாயனூர் தடுப்பணையில் இருந்து தண்ணீர் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்டவை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தி.மு.க. 7 முறை வெற்றி

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை 17 முறை நடந்த தேர்தலில் தி.மு.க. 7 முறையும், அ.தி.மு.க. 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும், தி.மு.க. கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி ஒரு முறையும் மற்றும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. பெரம்பலூர் தொகுதியில் இதுவரை தி.மு.க. 2 முறையும், அ.தி.மு.க. ஒரு முறையும் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் இதுவரை தி.மு.க.- அ.தி.மு.க. நேரடியாக 9 முறை மோதியுள்ளது. அதில் அ.தி.மு.க. 6 முறையும், தி.மு.க. 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

பெரம்பலூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களான ஆ.ராசா, நடிகர் நெப்போலியன் ஆகியோர் மத்திய மந்திரியாக இருந்துள்ளனர். தற்போது இந்த தொகுதியில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 10-வது முறையாக நேரடியாக மோதுகின்றன. 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி), பெரம்பலூர் (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் எப்படி?

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-

டி.ஆர்.பாரிவேந்தர் (இந்திய ஜனநாயக கட்சி) 6,83,697

என்.ஆர்.சிவபதி (அ.தி.மு.க.) 2,80,179

கே.சாந்தி (நாம் தமிழர் கட்சி) 53,545

எம்.ராஜசேகரன் (அ.ம.மு.க.) 45,591

நோட்டா 11,325

வெற்றி யார் கையில்?

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தோ்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரான இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஏற்கனவே இதே தொகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட பாரிவேந்தர் 2 லட்சத்து 38 ஆயிரத்து 887 வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பிடித்து தோல்வியடைந்தார். தற்போது பெரம்பலூர் தொகுதியில் பா.ஜனதா கூட்டணியில் பாரிவேந்தர் மீண்டும் தாமரை சின்னத்தில் களம் காண்கிறார். இந்த தேர்தலில் தி.மு.க. பெரம்பலூர் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்காமல் தன் வசப்படுத்தி போட்டியிடுகிறது. தி.மு.க. வேட்பாளராக கட்சியின் முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண்நேரு களமிறக்கப்பட்டு உள்ளார். தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினரான அவர் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க. வேட்பாளராக கட்சியின் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளரும், மறைந்த முன்னாள் தி.மு.க. அமைச்சர் செல்வராஜின் தம்பி மகனுமான என்.டி.சந்திரமோகனும் முதன்முறையாக களம் காண்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கட்சியின் அடிப்படை உறுப்பினர் தேன்மொழி போட்டியிடுகிறார். இவர் இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒரேயொரு பெண் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பகுஜன் சமாஜ் கட்சி, சாமானிய மக்கள் நல கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 13,91,853 வாக்காளர்கள் இருந்தனர். அடுத்த 5 ஆண்டுகளில் 54,499 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். எனவே, புதிய வாக்காளர்களின் ஓட்டும் வெற்றியை நிர்ணயிப்பதில் துருப்பு சீட்டாக இருக்கும். மக்கள் யார் பக்கம்? வெற்றி மகுடம் யாருக்கு? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Next Story