'இந்தியாவில் 75 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கின்றனர்' - பசவராஜ் பொம்மை


இந்தியாவில் 75 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கின்றனர் - பசவராஜ் பொம்மை
x

அசாத்தியமான விஷயங்களை சாதித்து காட்டுவதே பிரதமர் மோடியின் அடையாளம் என கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

பெங்களூரு,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கடக்-ஹாவேரி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் ரான் தாலுகா பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது;-

"எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல், நாட்டின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சிக்கானது. பிரதமர் மோடி இந்த நாட்டை 10 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். தற்போது வரை அவருக்கு சாதகமான அலை ஓயவில்லை. இந்தியாவில் 75 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கின்றனர். மீதம் உள்ளவர்கள் அவரை எதிர்க்கின்றனர்.

பிரதமர் மோடியின் தாயார் காலமானபோது, சுமார் 2 மணி நேரம் இடைவேளை எடுத்துக்கொண்டு தனது கடமைகளை நிறைவேற்றிவிட்டு மீண்டும் பிரதமர் மோடி பணிக்கு திரும்பினார். தூய்மை பணியாளர்களுக்கு அவர் பாத பூஜை செய்கிறார்.

வறுமை கோட்டிற்கு கீழ் இருந்த சுமார் 15 கோடி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டுள்ளது. வீடுதோறும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. அசாத்தியமான விஷயங்களை சாதித்து காட்டுவதே பிரதமர் மோடியின் அடையாளம்."

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story