நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை 23-ம் தேதி அறிமுகப்படுத்துகிறார் சீமான்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை சீமான் 23-ம் தேதி அறிமுகப்படுத்துகிறார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் 23-ம் தேதி அறிமுகப்படுத்துகிறார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடவிருக்கும் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டமானது, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் சென்னையில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கின்றது.
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், நாடாளுமன்றத் தொகுதிவாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும், பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது.