நாடாளுமன்ற தேர்தல்: தபால் வாக்களித்த ஆற்காடு வீராசாமி


நாடாளுமன்ற தேர்தல்: தபால் வாக்களித்த ஆற்காடு வீராசாமி
x

சென்னையில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு சேகரிக்கும் பணி இன்று தொடங்கியது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறவுள்ளது. எனவே, வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத நிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் அவர்களது வீட்டிற்கு நேரடியாக சென்று தபால் வாக்குகள் பெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து உள்ளது. அதற்காக வீடு வீடாக சென்று தபால் வாக்கு சேகரிக்க தேர்தல் ஆணையம் குழுக்கள் அமைத்துள்ளது.

அந்தவகையில், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 நாடாளுமன்ற தொகுதிகளில் 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 75 ஆயிரத்து 120 பேர் வாக்களிக்க உள்ளனர்.

அதன்படி, தபால் வாக்குப்பதிவானது இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் தபால் வாக்குப்பதிவு பணிக்காக 67 குழுக்கள் ஈடுபட்டன. ஒவ்வொரு குழுவிலும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர், கண்காணிப்பாளர், வீடியோகிராபர், மற்றும் ஒரு துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஆகியோர் இருந்தனர்.

ராயபுரம், பார்த்தசாரதி தெருவில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கியது. இதில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர் தபால் வாக்கு எவ்வாறு அளிக்க வேண்டும் என வாக்காளருக்கு விளக்கம் அளித்தார். இதையடுத்து, அவரின் வாக்காளர் அட்டையில் உள்ள எண் மற்றும் முகவரியை சோதனை செய்தனர். வாக்காளரிடம் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து பெற்றனர். தொடர்ந்து வாக்காளரின் வீட்டில் வாக்குச்சாவடி போன்ற கட்டமைப்பை ஏற்படுத்தினர்.

அதன்பின், வேட்பாளரின் சின்னம் மற்றும் பெயர் அடங்கிய வாக்குச் சீட்டை வாக்காளர் கையில் கொடுத்து, அவரிடம் ரகசியமான முறையில் வாக்கை பெற்று, அந்த வாக்குச்சீட்டை சீல் வைத்து வாக்கு சேகரிக்கும் பெட்டியில் சேகரித்தனர். வாக்களித்தவர் விரலில் அழியாத 'மை' வைக்கப்பட்டது. இதுபோன்ற வாக்குப்பதிவானது வரும் 13-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

தி.மு.க. முன்னாள் அமைச்சரும், வட சென்னை தி.மு.க. வேட்பாளருமான கலாநிதி வீராசாமியின் தந்தையுமான ஆற்காடு வீராசாமி உடல்நலக்குறைவால் வீட்டில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று நாடாளுமன்ற தேர்தலுக்காக தபால் வாக்குச்சீட்டு மூலம் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.


Next Story