மோடிதான் மீண்டும் பிரதமர் என்று மக்கள் முடிவு செய்து விட்டனர்: அண்ணாமலை பேச்சு
3வது முறை மோடி ஆட்சி அமைந்தால் நதிநீர் இணைப்பு திட்டம் மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என அண்ணாமலை பேசினார்.
கோவை,
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்வீரர் கூட்டம் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது.
"இந்தியாவில் நடைபெற உள்ள இந்தத் தேர்தல் வித்தியாசமான தேர்தல். இது 2014 போல் இல்லாமல், 2019 போலவும் இல்லாமல் நடைபெறுகிறது. ஏனென்றால் மோடி தான் மீண்டும் பிரதமர் என்று மக்கள் முடிவு செய்த தேர்தல் இது. பத்தாண்டு காலம் ஆட்சி செய்த மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். ஏனென்றால் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கும் நேரம் இது. அவற்றை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
மேலும் 3வது முறை மோடி ஆட்சி அமைந்தால் நதிநீர் இணைப்பு திட்டம் மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும். ஏனென்றால் அண்டை மாநிலங்களில் இருந்து உற்பத்தியாகும் ஆறுகள்தான் தமிழகத்திற்குள் வருகின்றன. காவிரி கர்நாடகாவில் உற்பத்தி ஆகிறது. சிறுவாணி கேரளாவில் உற்பத்தி ஆகிறது.
70 ஆண்டு காலம் யாரெல்லாம் இந்தியா முன்னேறக்கூடாது என்று இருந்தார்களோ அவர்களெல்லாமதான் இந்தியா கூட்டணி என்று சேர்ந்துள்ளனர்.
கோவையில் தண்ணீர் பஞ்சம் தலைதூக்கிவிட்டது. உங்கள் தொகுதி பிரச்சனைகளை மேலே கொண்டு சென்று சரி செய்வதற்கு ஒரு நபர் தேவை. குறைந்தபட்சம் நான் சொல்ல கூடியதை அவர்கள் கேட்டு அதன் பிறகு அழுத்தம் கொடுத்து செய்ய வேண்டியதை செய்ய வைப்பது என் கடமை.
நதிநீர் இணைப்பு திட்டம் மூலம் குஜராத்தில் பாசன வசதி 50 சதவீதம் அதிகரித்துள்ளது. அது இல்லாததால் இங்கு 14 சதவீதம் பாசன வசதி குறைந்துள்ளது இந்த முறை மாற்றத்திற்காக நிற்கிறேன். இப்போது மாற்றமில்லை என்றால் எப்போதும் மாற்றமில்லை. இந்த முறை பாஜக 400 தொகுதிகள் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் நதிநீர் இணைப்பு திட்டம் கொண்டு வரப்படும்.
அரசியலில் நான் விடுமுறை எடுத்ததே இல்லை என் அம்மாவை பார்த்தே 2 மாதம் ஆகிவிட்டது. கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். இந்தத் தொகுதி எம்.பி.யை யாருமே பார்த்ததில்லை. ஆனால் என்னை எத்தனை முறை பல்லடம் மக்கள் பார்த்துள்ளீர்கள். அவர்கள் பணத்தோடு களத்தில் நிற்கின்றனர். நான் மக்கள் பலத்தோடு நிற்கிறேன்.
கோவை தொகுதிக்கு தேவையானதை டெல்லியில் சண்டையிட்டு பெற்றுத் தருவேன். கோவை தொகுதிக்கு வலிமையான மக்கள் பிரதிநிதி தேவை. கெட்டவர்கள் அதிகாரத்திற்கு வரக்கூடாது என்றால் நல்லவர்கள் அரசியல் பேச துவங்க வேண்டும். " இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் பாஜக கோவை பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் ஜி.கே.எஸ். செல்வகுமார், மாவட்டத் துணைத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.