நாட்டை பிளவுபடுத்த பிரதமர் மோடி முயற்சி செய்கிறார்- பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு


நாட்டை பிளவுபடுத்த பிரதமர் மோடி முயற்சி செய்கிறார்- பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு
x

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்களிடையே வேற்றுமையை உருவாக்க முயற்சிப்பதை இந்தியா கூட்டணி எதிர்க்கிறது.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவை தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிடுகிறது. தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர் அகா ருகுல்லா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று கட்சி தொண்டர்களிடையே பரூக் அப்துல்லா பேசியதாவது:-

முஸ்லிம்களுக்கு எதிராக பிரதமர் மோடி சமீபத்தில் ராஜஸ்தானில் பேசியது நாட்டையே உலுக்கி உள்ளது. பிரதமர் என்பவர், நாட்டின் அரசியலமைப்பின் கீழ் அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டும். பிரதமராக வருபவர் அனைவருக்கும் ஒரு தந்தை போன்றவர். அவரது கட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்களின் நிறம், மதம், உணவு அல்லது உடையால் யாரையும் வேறுபடுத்தி பார்க்கக்கூடாது. ஆனால், பிரதமர் மோடி நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறார். அவரது பேச்சு ஏமாற்றம் அளிக்கிறது.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என அனைவரும் நாட்டின் குடிமக்கள். இந்த சமூகங்களிடையே வேற்றுமையை உருவாக்க முயற்சிப்பதை இந்தியா கூட்டணி எதிர்க்கிறது. இந்தியாவின் அடையாளத்தையும், ஆபத்தை எதிர்கொண்டுள்ள இந்திய அரசியலமைப்பையும் பாதுகாக்கவே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று டாக்டர் அம்பேத்கரின் அரசியலமைப்பை பாதுகாக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story