'மூன்று கட்ட தேர்தல்களுக்குப் பிறகு பிரதமர் மோடி கவலையில் இருக்கிறார்' - மல்லிகார்ஜுன கார்கே
மூன்று கட்ட தேர்தல்களுக்குப் பிறகு மோடியும், அமித்ஷாவும் கவலையில் இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
ஐதராபாத்,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், 4-ம் கட்ட தேர்தல் வரும் 13-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் மூன்று கட்ட தேர்தல்களுக்குப் பிறகு பிரதமர் மோடியும், மத்திய மந்திரி அமித்ஷாவும் கவலையில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இது குறித்து ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"பா.ஜ.க.வினர் தங்கள் ஆட்சியின் சாதனைகள் குறித்து பேசாமல், காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்களை திரித்துப் பேசி, காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்து வருகின்றனர்.
மூன்று கட்ட தேர்தல்களுக்குப் பிறகு மோடியும், அமித்ஷாவும் கவலையில் இருக்கின்றனர். அவர்கள் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து பேசுவதை நிறுத்திவிட்டனர். காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதை மட்டுமே தற்போது செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடிக்கு மாங்கல்யம், மட்டன் மற்றும் முகலாயர்கள் ஆகிய 3 வார்த்தைகள் மிகவும் பிடித்தமானவை. குழந்தைத்தனமான விமர்சனங்களை முன்வைப்பது ஒரு பிரதமருக்கு உகந்தது அல்ல."
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.