'சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார்' - யோகி ஆதித்யநாத்
இந்தியாவின் மதிப்பை சர்வதேச அளவில் பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார் என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற பா.ஜ.க. உறுப்பினர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மாநில பா.ஜ.க. தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் யோகி ஆத்யநாத் பேசியதாவது;-
"உலகின் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான பிரதமர் மோடி, சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியுள்ளார். நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி, பயங்கரவாதம் மற்றும் நக்சல் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினார். மேலும் பிற்படுத்தப்பட்ட மக்களை இலக்காகக் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கினார்.
சுதந்திர இந்தியாவின் மீது நம்பிக்கை மற்றும் மரியாதையை அதிகரிப்பதில் பிரதமர் மோடி இணையற்ற பங்களிப்பைச் செய்துள்ளார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ், புதிய இந்தியா தன்னம்பிக்கையோடு வலுவான தேசமாக உருவாகி வருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக, பிரதமர் மோடி பத்தாண்டுகளாக அர்ப்பணிப்புடன் அயராது பணியாற்றியுள்ளார்.
வதந்திகள், தவறான சமூக வழிகாட்டுதல்கள், எதிர்க்கட்சிகளின் பிளவுபடுத்தும் உத்திகள் போன்ற எதிர்மறை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உறுதியுடன், நரேந்திர மோடியின் திறமையான தலைமையை ஏற்று ஒட்டுமொத்த தேசமும் 3-வது முறையாக பா.ஜ.க.விற்கு அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுத் தரும்."
இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.