சீனாவின் அரசியலமைப்பு புத்தகத்தை காட்டி ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார்; அசாம் முதல்-மந்திரி


Rahul Gandhi Constitution book
x

சீனாவின் அரசியலமைப்பு புத்தகத்தை காட்டி ராகுல் காந்தி பிரசாரம் செய்து வருவதாக அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார்.

திஸ்பூர்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின்போது தன்னுடன் சிவப்பு நிற அட்டையை கொண்ட இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கொண்டு செல்கிறார். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை மாற்றிவிடுவார்கள் என்றும், தற்போது நடைபெறுவது அரசியலமைப்பை காப்பதற்கான தேர்தல் என்றும் ராகுல் காந்தி கூறி வருகிறார்.

இந்நிலையில் சீனாவின் அரசியலமைப்பு புத்தகத்தை காட்டி ராகுல் காந்தி பிரசாரம் செய்து வருவதாக அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"இந்திய அரசியலமைப்பு புத்தகத்தின் அசல் பதிப்பு நீல நிற அட்டையை கொண்டது. சீனாவின் அரசியலமைப்பு புத்தகம் சிவப்பு நிற அட்டையை கொண்டது. ராகுல் காந்தி சீன அரசியலமைப்பு புத்தகத்தை தன்னுடன் கொண்டு செல்கிறாரா என்பதை நாம் சரிபார்க்க வேண்டும்.

நீல நிறம் கொண்ட நமது இந்திய அரசியலமைப்பு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அடிப்படையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டியது நமது கடமையாகிறது. ஆனால் ராகுல் காந்தி அதை எதிர்க்கிறார். எனவே, அவர் கையில் இருப்பது சீனாவின் அரசியலமைப்பு புத்தகம்தான் என உறுதியாக கூறுகிறேன்."

இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு சமூக வலைதளங்களில் பலர் பதில் அளித்து வருகின்றனர். அதன்படி ராகுல் காந்தியின் கையில் இருப்பது மூத்த அரசியல் தலைவர்களுக்கு கொடுக்கப்படும் சிறிய அளவிலான அரசியலமைப்பு புத்தகம் என்று பதிவிட்டுள்ளனர். மேலும் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இதே போன்ற சிவப்பு நிற அரசியலமைப்பு புத்தகத்துடன் இருக்கும் புகைப்படங்களையும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.


Next Story