அப்போது ஒரு பேச்சு, இப்போது ஒரு பேச்சு: ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சாடிய ராகுல் காந்தி
அரசியலமைப்பை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் இலக்கு என ராகுல் காந்தி தெரிவித்தார்.
டாமன்:
டாமன், டையூ மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் இன்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதாவது:-
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆகிய இரண்டு அமைப்புகளும் அரசியல் சாசனத்தையும், பல்வேறு அமைப்புகளையும் அழித்து தங்கள் எஜமானர்களை நாட்டின் ராஜாக்கள் ஆக்க முயற்சி செய்கின்றன.
ஆர்.எஸ்.எஸ் இன்று இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் அல்ல என்று கூறுகிறது. ஆனால் இதற்கு முன் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதாகச் சொன்னார்கள்.
அரசியலமைப்பையும் அது நாட்டிற்கு வழங்கிய அனைத்தையும் நாங்கள் பாதுகாக்கிறோம். மறுபுறம், அரசியலமைப்பை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் இலக்கு. இதுதான் அடிப்படை மட்டத்தில், இரண்டு சித்தாந்தங்களுக்கிடையில் உள்ள வித்தியாசம்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
முன்னதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஐதராபாத்தில் பேசியபோது, அரசியலமைப்பின்படி இடஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ். எப்போதும் ஆதரித்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.