மணிப்பூர் மக்கள் வாக்களிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் - இந்திய தேர்தல் ஆணையம்


மணிப்பூர் மக்கள் வாக்களிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் - இந்திய தேர்தல் ஆணையம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 16 March 2024 7:13 PM IST (Updated: 16 March 2024 10:20 PM IST)
t-max-icont-min-icon

மணிப்பூர் மக்கள் முகாம்களில் இருந்து வாக்கு செலுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று வெளியிட்டுள்ளார். இதன்படி 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என்றும், ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மணிப்பூர் மாநிலத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ராஜீவ் குமார் கூறுகையில், "மணிப்பூர் மாநிலத்தில் முகாம்களில் உள்ள மக்கள் தங்கள் முகாம்களில் இருந்தே வாக்கு செலுத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டுள்ளோம். வாக்காளர்கள் அந்தந்த முகாம்களில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

மணிப்பூர் மாநிலத்தில் ஏப்ரல் 19-ந்தேதி மற்றும் ஏப்ரல் 26-ந்தேதி என 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்குள்ள குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் மணிப்பூரில் இதுவரை 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி முகாம்களில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story