மத அடிப்படையில் ஓட்டு கேட்கவேண்டாம்.. கட்சியினருக்கு குலாம் நபி ஆசாத் அறிவுறுத்தல்


மத அடிப்படையில் ஓட்டு கேட்கவேண்டாம்.. கட்சியினருக்கு குலாம் நபி ஆசாத் அறிவுறுத்தல்
x

போட்டி வேட்பாளர்களுக்கு எதிராக தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கட்சியினரை குலாம் நபி ஆசாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டம், உதம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் வேட்பாளர் சரூரி (வயது 69) இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன்பின்னர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசியபோது, நாடாளுமன்ற தேர்தலில் கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்து விளக்கினார். அவர் பேசியதாவது:-

எனது 45 ஆண்டுகால அரசியலில், தேர்தல் பிரசாரத்தின் போது நான் போட்டி வேட்பாளர்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து பேசியதில்லை. அரசியலில் மதத்திற்கு எந்த பங்கும் இல்லை. தேர்தல் முடிந்ததும், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும். மதம், ஜாதி அல்லது இனம் எதுவாக இருந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமல் அனைத்து மக்களையும் சந்திக்கும் வகையில், தங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை திறந்து வைத்திருக்க வேண்டும்.

நமது கட்சி தலைவர்கள் போட்டி வேட்பாளர்களுக்கு எதிராக தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மதம், பிராந்தியம், சாதி மற்றும் மத நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் ஓட்டு கேட்பதை தவிர்க்க வேண்டும்.

வேட்பாளர்களை ஒருவருக்கொருவர் தூண்டிவிடுவதை ஊடகவியலாளர்கள் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தியால், கடந்த 2022-ம் ஆண்டு கட்சியை விட்டு விலகினார். பிறகு காஷ்மீரில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story