தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல் நடைபெறுகிறது - நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு
தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன் என்று ராகுல் காந்தி கூறினார்.
நெல்லை,
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் முதல் கட்டமாக 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரதமர் மோடி 7 முறை தமிழகம் வந்து சூறாவளி பிரசாரம் செய்து பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசியுள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் பிரசாரத்தை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார். இதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கிய தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோரும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் தமிழக பிரசார களத்தில் அனல் பறக்கிறது.
இந்தநிலையில் 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை நெல்லை வந்தடைந்தார். நெல்லை வந்த ராகுல் காந்தியை தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர்.
முன்னதாக ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை தனியார் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்கிய ராகுல்காந்தி, அங்கிருந்து கார் மூலம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான பாளையங்கோட்டை நெல்லை - திருச்செந்தூர் சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்துக்கு சென்றார்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் ராகுல்காந்தி, இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ராபர்ட் புரூஸ் (நெல்லை), கனிமொழி (தூத்துக்குடி), ராணிஸ்ரீகுமார் (தென்காசி), சு.வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), நவாஸ்கனி (ராமநாதபுரம்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), விஜய் வசந்த் (கன்னியாகுமரி) ஆகியோரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். தமிழகத்திற்கு வருவதை மிகவும் விரும்புகிறேன். எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்து கொள்ள விரும்புகிறேனோ அப்போதெல்லாம் தமிழகத்தை பார்க்கிறேன். பெரியார், காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் தமிழகத்தின் ஆளுமைகள். தமிழகத்தை விரும்புவதால்தான் எனது யாத்திரையை நான் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினேன். தமிழக கலாசாரம், பண்பாடு என்னை கவர்ந்துள்ளது. என் மீது தமிழக மக்கள் அன்பை பொழிந்துள்ளனர்.
ஒருபுறம் பெரியார் உள்ளிட்டோர் போதித்த சமூகநீதி; மறுபுறம் மோடியின் வெறுப்புணர்வு. இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடைபெறும் தேர்தல் இது. எதிரணியில் இருப்பவர்கள் ஒரே கலாசாரம், ஒரே மொழி என்ற சித்தாந்தத்தில் உள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து கலாசாரங்களும் காக்கப்பட வேண்டும் என்பதே காங்கிரசின் நிலைப்பாடு. தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல் நடைபெறுகிறது. தமிழ் மொழி மீதான தாக்குதலை தமிழர்கள் மீதான தாக்குதல் என்றே பார்க்கிறேன். அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.