மோடியின் தலைமையில் இந்தியா வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது - ராஜ்நாத் சிங்
காங்கிரஸ் இன்னும் சில ஆண்டுகளில் டைனோசரைப் போல் அழிந்துவிடும் என்று பாதுகாப்புத்துறை மத்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டேராடூன்,
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் கவுச்சரில் நடந்த பேரணியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். பவுரி மக்களவைத் தொகுதிக்கான கட்சியின் வேட்பாளரான அனில் பலுனிக்காக ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியிலிருந்து பலர் வெளியேறுவது தொடர்கிறது. ஒருவர் பின் ஒருவராக கட்சியை விட்டு வெளியேறி பா.ஜ.க.,வில் இணைகிறார்கள். இன்னும் சில வருடங்களில் காங்கிரஸ் டைனோசர் போல அழிந்துவிடும். 2024-க்குப் பிறகு சில ஆண்டுகளில் காங்கிரசின் பெயரைக் கேட்டால் சின்ன குழந்தைகளும் யார் என்று கேட்பார்கள்?
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது.மோடி நடத்திய பேச்சுவார்த்தையில் ரஷியா-உக்ரைன் போர் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை உலகமே அங்கீகரித்து வருகிறது என்றார்.