உத்தர பிரதேசம்: சுல்தான்பூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் மேனகா காந்தி வேட்புமனு தாக்கல்


தினத்தந்தி 1 May 2024 11:39 AM GMT (Updated: 1 May 2024 12:02 PM GMT)

சுல்தான்பூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் மேனகா காந்தி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்குள்ள சுல்தான்பூர் தொகுதிக்கு மே 25-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

சுல்தான்பூர் தொகுதி எம்.பி. மேனகா காந்தி, மீண்டும் அதே தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட உள்ளார். இதனை முன்னிட்டு இன்றைய தினம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அவரது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் அதிகாரி கிரித்திகா ஜோத்சனா பெற்றுக்கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேனகா காந்தி, "சுல்தான்பூர் தொகுதியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இன்னும் அதிக பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டும். இந்த தொகுதிக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இதுவரை நான் முயற்சித்து வந்தேன். எதிர்காலத்திலும் அதுவே எனது திட்டமாக இருக்கும்.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை மாற்றி இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவார்கள் என்று எதிர்கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் இட ஒதுக்கீட்டை யாராலும் ரத்து செய்ய முடியாது" என்று தெரிவித்தார். சுல்தான்பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் ராம் புவால் நிஷாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் உத்ராஜ் வர்மா ஆகியோர் போட்டியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story