'சும்மா தேர்தலுக்காக சொன்னோம்..' - மத்திய மந்திரியை விமர்சித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


சும்மா தேர்தலுக்காக சொன்னோம்.. - மத்திய மந்திரியை விமர்சித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 23 March 2024 10:22 PM IST (Updated: 23 March 2024 10:42 PM IST)
t-max-icont-min-icon

15 லட்சம் ரூபாய் தருவோம் என்று தேர்தலுக்காக சொன்னோம் என அமித்ஷா கூறியதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் கொரடச்சேரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தஞ்சை, நாகை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

"ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையாவது அவர் நிறைவேற்றினாரா? கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்து இந்தியர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை கொடுப்பேன் என்று சொன்னார். 15 லட்சம் ரூபாய் வேண்டாம், 15 ஆயிரம் ரூபாயாவது தந்தாரா? 15 ஆயிரம் வேண்டாம், 15 ரூபாயாவது தந்தாரா?

இதைக் கேட்டதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 'நாங்கள் சும்மா தேர்தலுக்காக சொன்னோம்' என்று சொல்லி முடித்துவிட்டார். அதேபோல் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று சொன்னார். வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா? படித்த இளைஞர்கள் பக்கோடா விற்கலாம் என்று பிரதமர் பேசினார்.

அடுத்து உழவர்களின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவேன் என்று சொன்னார். ஆனால், அதுவும் நடக்கவில்லை. வேளாண் சட்டங்களை கொண்டு வந்து உழவர்களின் வயிற்றில் அடித்தார்கள். அந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமி, வேளாண் சட்டங்களால் விவசாயிகள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும், நானும் ஒரு விவசாயிதான் என்றும் சொல்லி பச்சைத் துண்டு போட்டு பச்சை துரோகம் செய்தார்."

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.




Next Story