ராகுல் மட்டுமல்ல, 42 எம்.பி.க்களின் பதவி பறிப்பு; பின்னணி என்ன?


ராகுல் மட்டுமல்ல, 42 எம்.பி.க்களின் பதவி பறிப்பு; பின்னணி என்ன?
x

இந்திய ஜனநாயக வரலாற்றில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி மட்டும்தான் பறிக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. 1988-ம் ஆண்டில் இருந்து இதுவரையில் 42 எம்.பி.க்களின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு, நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. குற்ற வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றதால் எம்.பி. பதவி பறிப்பா என்று இன்றளவும் அங்கலாய்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்வது சட்டம் அப்படி சொல்லி இருக்கிறது. அப்படி என்ன சட்டம் என்கிறீர்களா?

கிரிமினல் வழக்கில் ஒரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. 2 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு சிறைத்தண்டனை பெறுகிறபோது, அவர்களது பதவி உடனே பறிக்கப்பட வேண்டும் என்று அரசியல் சட்டம் பிரிவு 102 (1) (ஈ) உடன் இணைந்த 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8 கூறுகிறது.

இந்தப் பிரிவுதான், "லலித் மோடி, நிரவ் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களுக்குப் பின்னாலும் மோடி என்ற பெயர் எப்படி வருகிறது?" என்று கேட்டு, இந்த அவதூறான வார்த்தைகளுக்காக இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 499, 500 ஆகியவற்றின்கீழ் ராகுல் காந்தி 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றதால் அவரது எம்.பி. பதவியைப் பறித்து இருக்கிறது.

42 எம்.பி.க்கள் பதவி பறிப்பு

இந்திய ஜனநாயக வரலாற்றில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி மட்டும்தான் பறிக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. 1988-ம் ஆண்டில் இருந்து இதுவரையில் 42 எம்.பி.க்களின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. 42 எம்.பி.க்களும் ஒரே மாதிரியான கிரிமினல் வழக்குகளில், ஒரே மாதிரியான தண்டனை பெற்றவர்கள் அல்ல.

பல்வேறு காரணங்களால் இவர்கள் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

19 மக்களவை எம்.பி. பதவி பறிப்பு

அதிகபட்சமாக 14-வது மக்களவையில் (2004-2009) மட்டுமே 19 மக்களவை எம்.பி.க்கள் பதவி பறிக்கப்பட்டது. 11 எம்.பி.க்கள் பதவி, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம் பெற்றதாக 'ஸ்டிங் ஆபரேஷன்' (ரகசிய நடவடிக்கை) நடத்தி அம்பலப்படுத்தப்பட்டது. 2005-ம் ஆண்டு, டிசம்பர் 12-ந் தேதி தனியார் டி.வி. சேனல் ஒன்றின்மூலம் செய்தி இணையதளம் ஒன்று இதை அம்பலப்படுத்தியது.

இதில் பா.ஜ.க. எம்.பி.க்களான ஒய்.ஜி. மகாஜன், சத்ரபால் சிங் லோத்தா, அன்னா சாகிப் எம்.கே.பாட்டீல், சந்திரபிரதாப் சிங், பிரதீப் காந்தி, சுரேஷ் சாந்தல், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்களான நரேந்தர் குமார் குஷ்வாகா, லால் சந்திர கோல், ராஜாராம்பால், ராஷ்டிரிய ஜனதாதளம் எம்.பி. மனோஜ்குமார், காங்கிரஸ் எம்.பி. ராம்சேவக் சிங் பதவி பறிக்கப்பட்டது. 10 பேர் மக்களவை எம்.பி.க்கள். ஒருவர் மாநிலங்களவை எம்.பி.

இவர்கள் பதவி பறிப்புக்கு மக்களவையில் அவை முன்னவராக இருந்த பிரணாப் முகர்ஜியும், மாநிலங்களவையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் தீர்மானம் கொண்டு வந்து பதவி பறிக்கப்பட்டது. பதவி பறிக்கப்பட்ட எம்.பி.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தப்போது, அவர்களது பதவி பறிப்பு சரியானதுதான் என சுப்ரீம் கோர்ட்டு 2007 ஜனவரியில் தீர்ப்பு அளித்தது.

கட்சி மாறி ஓட்டு...

* 1985-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கட்சித்தாவல் தடை சட்டத்தின்கீழ் லால்துகோமோ என்ற காங்கிரஸ் எம்.பி.யின் பதவி முதன் முதலாக பறிக்கப்பட்டது. இவர் தனிக்கட்சி தொடங்கி மிசோரம் சட்டசபை தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்தபோதே எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இது 1988-ம் ஆண்டு, நவம்பர் 24-ந் தேதி நடந்தது.

* 2008-ம் ஆண்டு, அமெரிக்கா உடனான சிவில் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக்கொண்டபோது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சி மாறி வாக்கு அளித்த 9 எம்.பி.க்கள் பதவியும் பறிக்கப்பட்டது.

* 9-வது மக்களவையில், ஜனதாதள தலைவராக இருந்த வி.பி.சிங் தேசிய முன்னணி அரசை அமைத்தார். இதில் 9 மக்களவை எம்.பி.க்கள் பதவி கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்கீழ் பறிக்கப்பட்டது.

* 10-வது மக்களவையில் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, 4 எம்.பி.க்கள் பதவி கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் பறிக்கப்பட்டது.

* மாநிலங்களவை எம்.பி.க்களும் கட்சித்தாவல் தடை சட்டத்தின்கீழ் பதவி பறிக்கப்பட்டதும் நடந்துள்ளது. அந்த எம்.பி.க்கள் முப்தி முகமது சயீத் (1989), சத்யபால் மாலிக் (1989), சரத் யாதவ் (2017), அலி அன்வர் (2017).

ஆதாய பதவி விவகாரம்

* இதேபோன்று ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித்தலைவர் சிபு சோரனும், சமாஜ்வாடி கட்சியின் நடிகை ஜெயா பச்சன் ஆகியோருடைய எம்.பி. பதவியும் ஆதாய பதவி (ஆபிஸ் ஆப் பிராபிட்) விவகாரத்தில் 2001 மற்றும் 2006 ஆண்டுகளில் பறிக்கப்பட்டுள்ளது. சிபுசோரன், ஜார்கண்ட் தன்னாட்சி கவுன்சில் தலைவர் பதவியும், ஜெயாபச்சன் உத்தரபிரதேச திரைப்பட வளர்ச்சி கவுன்சில் தலைவர் பதவியும் வகித்தது, சிக்கலாக மாறியது.

* காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவர் என்ற ஆதாய பதவி வகித்தது பிரச்சினையாகி அவரது பதவியைப் பறிக்கவும் முயற்சி நடந்தது. ஆனால் அவர் மக்களவை எம்.பி. பதவியில் இருந்து 2006-ம் ஆண்டு மார்ச் 26-ந் தேதி தாமாகவே விலகினார்.

* ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டதால் மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூது, மக்களவை எம்.பி.க்கள் ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தளத்தின் ஜெகதீஷ் சர்மா எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.

* ராகுல் காந்தி பதவி பறிப்புக்கு சற்று முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் முகமதுபைசல் பதவியும், ராகுல் காந்தி பதவி பறிப்புக்கு பின்னர் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. அப்சல் அன்சாரி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. ஆனால் முகமது பைசல் குற்றவாளி என கீழ்க்கோர்ட்டு அளித்த தீர்ப்பை கேரள ஐகோர்ட்டு நிறுத்தி வைத்ததால் அவரது எம்.பி. பதவி பறிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பதவி பறிப்புக்கு கிரிமினல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுவதும், கட்சித்தாவலில் ஈடுபடுவதும், கட்சி கொறடா உத்தரவை மீறி கட்சி மாறி ஓட்டு போடுவதும், ஆதாய பதவி வகிப்பதும் பதவி பறிப்புக்கு காரணமாகிறது.

இவை மட்டுமல்ல, நாடாளுமன்றமும், சட்டசபைகளும் குறிப்பிட்ட காரணங்களுக்காக, குறிப்பிட்ட நபர்கள் மீது தீர்மானம் கொண்டு வந்து பதவியைப் பறிக்கவும் முடியும் என்பதும் அடிக்கோடிட்டுக்காட்ட வேண்டிய அம்சமே.


Next Story