ஆண்டுதோறும் தக்காளி சீராகக் கிடைக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை; விவசாயிகளுக்கு மானியம் வழங்கவும் திட்டம்


ஆண்டுதோறும் தக்காளி சீராகக் கிடைக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை; விவசாயிகளுக்கு மானியம் வழங்கவும் திட்டம்
x

மாற்றுப்பயிர் சாகுபடியின் மூலம் தக்காளி பயிரிடப்படும் பரப்பு அதிகரித்து வருகிறது. தக்காளி விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஆண்டில் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ரூ.10 கோடியே 98 லட்சம் நிதி மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

வேளாண் உற்பத்தியை இருமடங்காக்கி, விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக பெருக்குவதே தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறையின் நோக்கமாக இருந்து வருகிறது. மொத்த புவியியல் பரப்பான 130.05 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், 14.60 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

இதில் தமிழ்நாட்டின் முக்கிய காய்கறி பயிர்களான மரவள்ளி, வெங்காயம், தக்காளி, கத்தரி, முருங்கைக்காய் மற்றும் வெண்டைக்காய் ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. மொத்த காய்கறி பயிர்களின் சாகுபடி பரப்பில் இது 75 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. காய்கறி பயிர்களில் தக்காளி சாகுபடி தமிழ்நாட்டில் பல இடங்களில் நடந்து வருகிறது.

தக்காளி

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டில் 41 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 12 லட்சத்து 50 ஆயிரம் டன் தக்காளி உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறாக உற்பத்தி செய்யப்படும் தக்காளி, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, சேலம் மாட்டம் மேட்டூர், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஆகிய சந்தைகளில் இருந்து சென்னை கோயம்பேடு, கொச்சி போன்ற பெரிய நகரங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதுதவிர பெங்களூருவில் உள்ள சந்தைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

விளைச்சல் அதிகரிப்பு

கடந்த சில ஆண்டுகளாக மாற்றுப்பயிர் சாகுபடியின் மூலம் தக்காளி பயிரிடப்படும் பரப்பு அதிகரித்து வருகிறது. மேலும் உயர் விளைச்சல் தரும் ரகங்கள் நிலத்தில் சாகுபடி செய்யப்படுகின்றன. சொட்டு நீர்ப்பாசனம், உரப்பாசனம் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இது தவிர, தட்ப வெப்பநிலை சாதகமாக அமைவது போன்ற காரணங்களால் தக்காளி விளைச்சல் உயர்ந்து உள்ளது என்றே சொல்லப்படுகிறது.இது ஒரு புறம் இருக்க, எதிர்பாராத அளவில் வறட்சி, பருவநிலை மாற்றம், வெப்பம் அதிகரித்தல், கனமழை, தொடர்மழை, காற்றின் அதிக ஈரப்பதம் ஆகியவற்றால் தக்காளி உற்பத்தி குறையும் சூழலும் அவ்வப்போது ஏற்படுவதும், தடுக்க முடியாததாகிவிடுகிறது.

தக்காளி சீராகக் கிடைக்க...

இந்த நிலையில் தக்காளி விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஆண்டில் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ரூ.10 கோடியே 98 லட்சம் நிதி மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், 700 ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி செடிகள் படர்வதற்கான டிரெல்லிஸ் முறையை அமைக்க ரூ.1 கோடியே 75 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

காய்கறி பயிரான தக்காளி விவசாயத்தை மேலும் மேம்படுத்தவும், அதனைப் பயிரிடும் விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யவும் தோட்டக்கலைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் தக்காளி சீராகக் கிடைப்பதற்கு, தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை சில உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மானியம்

* 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும். அந்த 3 ஆயிரம் ஹெக்டேரில் ரூ.36 லட்சம் நிதி செலவில் ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி மேலாண்மை செயல்படுத்தப்படும்.

* 1,500 ஹெக்டேர் சாகுபடி பரப்பில் ரூ.2 கோடியே 40 லட்சம் செலவில் களைகள் கட்டுப்படுத்துவதற்கும், நீரை சிக்கனப்படுத்துவதற்கும் பிளாஸ்டிக் நிலப்போர்வை அமைக்கப்படும்.

* 2 நிலப்போர்வை அமைக்கும் எந்திரங்கள் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் நிதியில் வழங்கப்படும்.

* நிலத்தை தயார் செய்யவும், விதைகளை விதைக்கவும், உரம் இடுவதற்காகவும் 30 பவர் டிரில்லர்கள் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் நிதியில் வழங்கப்படும்.

விளக்குப்பொறிகள், தெளிப்பான்கள்

* தக்காளியை தாக்கும் துளைப்பான்களைக் கட்டுப்படுத்துவதற்கு 500 விளக்குப்பொறிகள் ரூ.6 லட்சம் நிதியில் வழங்கப்பட உள்ளது. ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் நிதியில் 200 தெளிப்பான்கள் கொடுக்கப்படும்.

* 1,200 ஹெக்டேர் பரப்பில் தக்காளி செடிகள் படருவதற்கான டிரெல்லிஸ் முறை ரூ.3 கோடி நிதியில் வழங்கப்படும். 500 ஹெக்டேர் பரப்பில் தக்காளி பயிருக்கு ரூ.6 கோடியே 79 லட்சம் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் நிறுவப்பட உள்ளது.

தக்காளி விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள்

தக்காளியை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் விளைச்சல் இருக்கும் போதும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உற்பத்தி அதிகரிக்கும் போதும், தக்காளி வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. உற்பத்தி அதிகமான காலங்களில் விலை விழ்ச்சி ஏற்படும்போது, இணையத்தள தேசிய வேளாண் சந்தை மூலம் சரியான விலையில் விற்பனை செய்திட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை, 167 அலுவலர்களைக் கொண்டு பயிற்சி அளித்திருக்கிறது.

மேலும், தக்காளி சந்தைப்படுத்த முடியாமல் தேங்கும் நிலை வரும்போது சேமிப்புக்கிடங்குகளில் சேமித்து விற்பனை செய்யவும், தக்காளி பதப்படுத்தப்பட்ட பொருட்கள் தயாரிக்கவும், தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்கும், தொழில் முனைவோருக்கும், தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட தக்காளி நல்ல விலையில் சந்தைப்படுத்த ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறை, குளிர்பதனக்கிடங்கு ஆகியவற்றை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.


Next Story