7 சகோதரிகளும்... ஒரு சகோதரனும்...


7 சகோதரிகளும்... ஒரு சகோதரனும்...
x
தினத்தந்தி 25 Jun 2023 1:30 PM GMT (Updated: 25 Jun 2023 1:30 PM GMT)

அசாம், அருணாசலபிரதேசம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து ஆகியவை 7 சகோதரி மாநிலங்கள் என்றும், இந்தியாவுடன் கடைசியாக இணைந்த சிக்கிம் சகோதர மாநிலம் என்றும் அழைக்கப்படுகின்றன. அதாவது 7 சகோதரிகளுக்கு ஒரு சகோதரன்.

இந்தியாவிலேயே பெண்கள் அதிக சுதந்திரத்துடனும், அதிகாரத்துடனும் வாழும் மாநிலம் மேகாலயாதான். அங்கு திருமணம் முடிந்ததும் ஆண்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக மாமியார் வீட்டுக்குத்தான் போகவேண்டும்.

தேகம்...தேசம்...

இந்த இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. அவயங்கள் சேர்ந்தது தேகம்; மாநிலங்களை உள்ளடக்கியது தேசம். அவயங்கள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட்டால்தான் தேகம் ஆரோக்கியமாக இருக்கும். மாநிலங்கள் ஒன்றுக்கொன்று நல்லிணக்கத்துடன் இருந்தால்தான் தேசம் நன்றாகவும் வளமாகவும் இருக்கும்.

உலகிலேயே அதிக மக்கள் (143 கோடி பேர்) வசிக்கும் மிகப்பெரிய ஜனநாயக நாடான சுமார் 33 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தியாவில் 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன.

நாட்டின் மத்திய பகுதியில் கிழக்கு மேற்காக நீண்டு கிடக்கும் விந்திய மலைக்கு தெற்கே அமைந்துள்ள மாநிலங்கள் தென் மாநிலங்கள் என அழைக்கப்படுவது போல், இமயமலையின் கிழக்கு முனையில் நேபாளம், பூடான், வங்காளதேசம், மியான்மர், சீனா ஆகிய நாடுகளையொட்டி அமைந்துள்ள மாநிலங்கள் வடகிழக்கு மாநிலங்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றில் அசாம், அருணாசலபிரதேசம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து ஆகியவை 7 சகோதரி மாநிலங்கள் என்றும், இந்தியாவுடன் கடைசியாக இணைந்த சிக்கிம் சகோதர மாநிலம் என்றும் அழைக்கப்படுகின்றன. அதாவது 7 சகோதரிகளுக்கு ஒரு சகோதரன்.

இயற்கை வளத்தில் மட்டுமின்றி கலாசாரம், பண்பாடு போன்றவற்றிலும் சிறந்து விளங்கும் இந்த மாநிலங்கள் பாதுகாப்பு ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன.

மேற்கு வங்காள மாநிலத்தின் வடகோடியான சிலிகுரியில் உள்ள 20 கிலோ மீட்டர் அகலமே கொண்ட மிகச்சிறிய நிலப்பகுதியின் வழியாக வடகிழக்கு மாநிலங்கள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த குறுகிய நிலப்பகுதியை கோழிக்கழுத்து என்கிறார்கள்.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வடகிழக்கு மாநிலங்களின் மக்கள் தொகை 4 கோடியே 60 லட்சம் ஆகும். இவர்களில் 68 சதவீதம் பேர் அசாம் மாநிலத்தில்தான் வசிக்கிறார்கள்.

மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 54.02 சதவீதம் பேர். இவர்களுக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் 25.05 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 17.24 சதவீதமும், பவுத்தர்கள் 1.37 சதவீதமும், ைஜனர்கள், சீக்கியர்கள் தலா 0.07 சதவீதமும், பிற சமூகத்தினர் 2.18 சதவீதமும் உள்ளனர்.

அசாம், திரிபுரா, மணிப்பூர், சிக்கிம் மாநிலங்களில் இந்துக்களும், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம், அருணாசலபிரதேச மாநிலங்களில் கிறிஸ்தவர்களும் அதிகமாக வசிக்கிறார்கள். சிக்கிம், அருணாசலபிரதேசம், மிசோரம் மாநிலங்களில் புத்த மதத்தினர் கணிசமாக உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்களில் 93 சதவீதம் பேர் அசாமில்தான் வசிக்கிறார்கள்.

மேலும் இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களில் 30 சதவீதம் பேர் வடகிழக்கு மாநிலங்களில்தான் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அசாம், அருணாசலபிரதேச மாநிலங்களை தவிர்த்து பார்த்தால் வடகிழக்கு பிராந்தியத்தின் கல்வி அறிவு தேசிய சராசரியான 74.04 சதவீதத்தை விட அதிகமாகவே உள்ளது.

இந்த பிராந்தியத்தில் அசாமியர்கள், போடோ, மெய்தேய் உள்ளிட்ட 220-க்கும் அதிகமான இனங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். மலைப்பகுதிகள் நிறைந்த அருணாசலபிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்தில் பழங்குடியின மக்கள் அதிகம் உள்ளனர்.

33.24 சதவீத மக்கள் அசாமி மொழிதான் பேசுகிறார்கள், இதற்கு அடுத்தபடியாக பெங்காலி (26.20 சதவீதம்), இந்தி (5.45 சதவீதம்) மணிப்புரி (3.79 சதவீதம்), போடோ (3.14 சதவீதம்) மற்றும் பிற மொழிகள் பேசப்படுகின்றன.

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு பகுதியில் அசாமி மொழியும், பாரக் பள்ளத்தாக்கில் வங்காள மொழியும், போடோலாந்து பகுதியில் போடோ மொழியும் அலுவலக மொழிகளாக உள்ளன. மணிப்பூரில் மெய்தேய் (மணிப்புரி மொழி) அலுவலக மொழியாக இருக்கிறது. இது தவிர மேகாலயா, நாகாலாந்து, மிசோரம், சிக்கிம், திரிபுரா மாநிலங்களில் அந்தந்த பிராந்திய மொழிகளுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாக உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களின் நுழைவு வாயிலாக விளங்கும் அசாம் மகாபாரதத்தில் 'பிரயோகியோதிசா', 'காமரூபம்' என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. 78 ஆயிரத்து 438 ச.கி.மீ. பரப்பளவை கொண்ட இந்த மாநிலம். ஆங்கிலேயர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, 1826-ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தது. 3 கோடியே 13 லட்சம் பேர் வசிக்கும் அசாமில் 72.9 சதவீதம் பேர் படிப்பறிவு பெற்றவர்கள். பிரம்மபுத்ரா, பாரக் நதிகளால் நீர்வளம் மிகுந்த இந்த மாநிலம் தேயிலை உற்பத்திக்கு பெயர் பெற்றது. பெட்ரோலியம், பட்டு உற்பத்தியும் அதிக அளவில் நடைபெறுகிறது.

இந்த மாநிலத்தின் வடபகுதியில் பூடான் எல்லையையொட்டி; அமைந்துள்ள கோக்ரஜார் சிராங், பாக்சா, உதல்குரி ஆகிய 4 மாவட்டங்கள் அடங்கிய பகுதி 'போடோலாந்து' என்ற பெயரில் சுயாட்சி பிராந்தியமாக விளங்குகிறது. மத்திய அரசின் உத்தரவோ அல்லது மாநில அரசின் உத்தரவோ எதுவாக இருந்தாலும் 'போடா நிர்வாக குழு' ஏற்றுக்கொண்டால்தான் அதை இங்கு செயல்படுத்த முடியும். எந்த அரசாணையையும் ஏற்கவோ, நிராகரிக்கவோ இந்த நிர்வாக குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

அசாமில் 126 சட்டசபை தொகுதிகளும், 7 எம்.பி. தொகுதிகளும், 14 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களும் உள்ளன. இங்கு முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வா சர்மா தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்கு நக்சல்கள் அச்சுறுத்தல் அதிகம் இருந்ததால் 1990-ம் ஆண்டு முதல் 'ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம்' அமல்படுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் நடைமுறையில் இருந்த இந்த சட்டம் தற்போது 8 மாவட்டங்களில் மட்டும் செயல்பாட்டில் உள்ளது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீரடைந்து வருவதால் இந்த சட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படும் என்று ஹிமாந்த பிஸ்வா சர்மா சமீபத்தில் அறிவித்து இருக்கிறார்.

அசாமின் தென்பகுதியில் இருந்த காசி ஹில்ஸ், ைஜன்டியா ஹில்ஸ், காரோ ஹில்ஸ் ஆகிய மலைப்பகுதிகள் அடங்கிய 2 மாவட்டங்களை தனியாக பிரித்து 1972-ம் ஆண்டு ஜனவரி 21-ந்தேதி புதிதாக உருவாக்கப்பட்ட மேகாலயா மாநிலத்தில் சுமார் 32 லட்சம் பேர் வசிக்கிறார்கள். மேகாலயா என்றால் 'மேகங்களின் உறைவிடம்' என்று பொருள். 22 ஆயிரத்து 429 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்கை, ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் 'கிழக்கத்திய ஸ்காட்லாந்து' என்று அழைத்தனர்.

இந்த மாநிலத்தில் ஆண்டுக்கு 1,200 செ.மீ. மழை பெய்கிறது. உலகிலேயே அதிக மழை பொழியும் இடமான சிரபுஞ்சி இங்குதான் உள்ளது.

வங்காளதேசத்தை தெற்கு எல்லையாக கொண்டுள்ள மேகாலயாவில் 60 சட்டசபை தொகுதிகளும், 2 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் உள்ளன. இங்கு முதல்-மந்திரி கொன்ராட் சங்மா தலைமையில் தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் மகன் ஆவார்.

இந்தியாவிலேயே பெண்கள் அதிக சுதந்திரத்துடனும், அதிகாரத்துடனும் வாழும் மாநிலம் மேகாலயாதான். இங்கு பெண் குழந்தை பிறந்தால் விமரிசையாக கொண்டாடுகிறார்கள். ஆண் குழந்தை பிறந்தால் இருந்துவிட்டுப் போகட்டும் என்று ஏற்றுக்கொள்கிறார்கள். குடும்பத்தில் உள்ள கடைசி பெண் குழந்தைக்குத்தான் பூர்வீக சொத்து சேரும். அவள்தான் பெற்றோரை பார்த்துக் கொள்ளவேண்டும். குடும்பத்தில் உள்ள எல்லா குழந்தைகளையும் படிக்கவைத்து ஆளாக்கும் பொறுப்பு கடைசி பெண்ணுக்கும் அவளது தாயாருக்கும்தான் உள்ளது. திருமணம் முடிந்ததும் ஆண்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக மாமியார் வீட்டுக்குத்தான் போகவேண்டும்.

1972-ம் ஆண்டு அசாம் மாநிலம் மீண்டும் துண்டாடப்பட்டது. அப்போது மியான்மர் எல்லையையொட்டி இருந்த ஒரு பகுதி தனியாக பிரிக்கப்பட்டு மிசோரம் யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டது. பின்னர் 1987-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி மிசோரத்துக்கு மத்திய அரசு தனி மாநில அந்தஸ்து வழங்கியது. வங்காளதேசம், மியான்மர் நாடுகளுடன் 722 கி.மீ. நீள எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள மிசோரத்தை சுற்றி திரிபுரா, அசாம், மணிப்பூர் மாநிலங்கள் உள்ளன.

21 ஆயிரத்து 87 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மாநிலத்தில் 12 லட்சம் பேர் வசிக்கிறார்கள். மாநிலத்தின் பரப்பளவில் 91 சதவீதம் காடுகள்தான். இங்கு இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 87.16 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள். பவுத்தர்கள் 8.51 சதவீதமும், இந்துக்கள் 2.75 சதவீதமும், இஸ்லாமியர்கள் 1.35 சதவீதமும் இருக்கிறார்கள்.

கேரளாவை அடுத்து படிப்பறிவில் 92 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்த மாநிலம்.

மிசோரம் மாநிலத்துக்கு செல்வதற்கு 'இன்னர் லைன் பெர்மிட்' (ஐ.எல்.பி.) எனும் அனுமதியை பெறவேண்டும். இந்த அனுமதி இல்லாமல் அந்த மாநிலத்துக்குள் நுழைய முடியாது. இதற்கான அனுமதியை புதுடெல்லி, கொல்கத்தா, கவுகாத்தி, சில்சார், ஷில்லாங் நகரங்களில் உள்ள மிசோரம் இல்லத்திலும், லெய்ங்புய் விமானநிலையத்திலும் ஏதாவது ஓர் அடையாள அட்டையை காட்டி இந்த அனுமதியை பெற்றுக் கொள்ளலாம். லெய்ங்புய் விமானநிலையம் தலைநகரான அய்ஸ்வாலில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இந்த மாநிலத்தில் 40 சட்டசபை தொகுதிகளும், தலா ஒரு மக்களவை மற்றும் மாநிலங்களவை தொகுதிகளும் உள்ளன. இங்கு 2018-ம் ஆண்டு முதல் முதல்-மந்திரி சோரம்தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

வடக்கே நாகாலாந்து, தெற்கே மிசோரம், மேற்கே அசாம் மாநிலங்களையும், கிழக்கே மியான்மர் நாட்டையும் எல்லைகளாக கொண்டுள்ள 22 ஆயிரத்து 323 ச.கி.மீ பரப்பளவு கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் 29 லட்சம் பேர் வசிக்கிறார்கள். மன்னராட்சியின் கீழ் இருந்த மணிப்பூர் 1949-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி இந்தியாவுடன் இணைந்தது. 1956 வரை யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூருக்கு, 1971-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 'வடகிழக்கு பிராந்திய மறுசீரமைப்பு சட்டத்தின்' கீழ், தனி மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.

தலைநகர் இம்பாலில் உள்ள விமானநிலையம் சர்வதேச விமான நிலையமாக அந்தஸ்து உயர்த்தப்பட்டு இருக்கிறது. இங்குள்ள லோக்தாக் ஏரியில் உள்ள மிதக்கும் ஆரம்ப பள்ளிதான் இந்தியாவின் முதல் மிதக்கும் பள்ளிக்கூடம் ஆகும்.

மணிப்பூரில் இருந்து சாலை மார்க்கமாக மியான்மர், தாய்லாந்து நாடுகளுக்கு செல்லலாம். ஐ.எம்.டி. (இந்தியா, மியான்மர், தாய்லாந்து) நெடுஞ்சாலை என்ற பெயர் கொண்ட இந்த சாலை 1,360 கி.மீ. நீளம் கொண்டது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் உறவையும் வர்த்தகத்தையும் மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட இந்த சாலையை கம்போடியா, வியட்னாம், லாவோஸ் நாடுகள் வரை 3,200 கி.மீ. தூரம் நீடிக்க இந்தியா யோசனை தெரிவித்தது. அதன் ஒரு பகுதியாக இந்த சாலை தாய்லாந்தில் இருந்து கம்போடியா, வியட்னாம் வரை நீட்டிக்கப்பட்டு 2015-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.

மணிப்பூர் மாநிலத்தில் 60 சட்டசபை தொகுதிகளும், 3 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் உள்ளன. இங்கு என்.பைரன் சிங் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறுகிறது

இந்தியாவில் பாதுகாப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக விளங்கும் அருணாசலபிரதேசம் 7 சகோதரி மாநிலங்களில் பெரியது ஆகும். இந்த மாநிலத்தின் தெற்கே அசாம், நாகாலாந்து மாநிலங்களும், மேற்கே பூடான், கிழக்கே மியான்மர் நாடுகளும் உள்ளன. வடக்கே சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் 'திபெத் தன்னாட்சி பிராந்தியம்' உள்ளது. சீனாவுடன் 1,129 கி.மீ. எல்லையை ('மக்மோகன் கோடு') அருணாசலபிரதேசம் பகிர்ந்து கொண்டு உள்ளது.

'வடகிழக்கு முன்னணி முகமை பிராந்தியம்' என்ற பெயரில் இருந்த அருணாசலபிரதேசம் 1972-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி யூனியன் பிரதேசம் ஆனது. பின்னர் 1987-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியது.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசலபிரதேசத்தை, திபெத்தின் தெற்கு பிராந்தியம் என்று கூறி சீனா அடாவடியாக சொந்தம் கொண்டாடி வருவதால், எல்லைப்பகுதி எப்போதும் பதற்றமாகவே இருந்து வருகிறது. இதனால் எல்லையில் இரு நாட்டு படைகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்படுவது உண்டு.

இந்த மாநிலத்தில் முதன் முதலாக 2013-ம் ஆண்டுதான் ரெயில் பாதை அமைக்கப்பட்டு அசாமில் உள்ள தெகர்கோன் என்ற இடத்தில் இருந்து 181 கி.மீ. தொலைவில் உள்ள இடா நகருக்கு (அருணாசலபிரதேச தலைநகர்) ரெயில் இயக்கப்பட்டது. டெல்லியில் இருந்து இடா நகருக்கு 2015-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி முதல் ரெயில் விடப்பட்டது. சீனா எல்லை அருகேயுள்ள தவாங் நகர் வரை ரெயில் பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

83 ஆயிரத்து 743 ச.கி.மீ. பரப்பளவை கொண்ட இந்த மாநிலத்தில் 14 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு 60 சட்டசபை தொகுதிகளும், 2 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் உள்ளன. இங்கு முதல்-மந்திரி பெமா காண்டு தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. பெமா காண்டு முன்னாள் முதல்-மந்திரி டோர்ஜி காண்டுவின் மகன் ஆவார்.

மற்றொரு வடகிழக்கு மாநிலமான திரிபுரா கிழக்கே அசாம், மிசோரம் மாநிலங்களையும் மற்ற 3 திசைகளில் வங்காளதேசத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது.

இங்குள்ள உதய்பூரில் 51 சக்தி பீடங்களில் ஒன்றான திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இதனாலேயே இந்த மாநிலத்துக்கு திரிபுரா என்ற பெயர் வந்தது. மகாபாரதத்தில் இந்த பிராந்தியம் 'கிரத் தேசம்' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

19 பிரிவுகளைச் சேர்ந்த பழங்குடியினர் வசிக்கும் இந்த மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 37 லட்சம். ஆங்கிலேயர் ஆட்சியின் போது மன்னராட்சியின் கீழ் இருந்து வந்த திரிபுரா, 1949-ல் இந்தியாவுடன் இணைந்து, யூனியன் பிரதேச அந்தஸ்து பெற்றது. பின்னர் 1972-ம் ஆண்டு ஜனவரி 21-ந்தேதி மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. 10 லட்சத்து 49 ஆயிரத்து 69 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மாநிலத்தின் மக்கள் தொகை 37 லட்சம்.

இந்த மாநிலத்தின் வனப்பகுதிகளில் பாதிக்கு மேல் மூங்கில் விளைகிறது.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போதும், பின்னர் 1971-ல் நடந்த கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய வங்காளதேசம்) விடுதலைப் போரின் போதும் ஏராளமான இந்துக்கள் அங்கிருந்து வெளியேறி திரிபுராவில் குடியேறினார்கள். பிரிவினைக்கு முன்பு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் இருந்து வங்காளதேசம் வழியாக சாலை மார்க்கமாக சென்றால், திரிபுரா தலைநகர் அகர்தலா வெறும் 350 கி.மீ. தூரம்தான். இப்போது வங்காளதேசத்தை சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் 1,700 கி.மீ. தூரம் ஆகிறது.

இந்த மாநிலத்தில் உள்ள மொத்த ரெயில் பாதையின் நீளம் 153 கி.மீ.தான். அகர்தலாவில் இருந்து கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

பிரபல ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் அகர்தலாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரிபுராவில் 60 சட்டசபை தொகுதிகளும், 2 மக்களவை தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் உள்ளன. இங்கு முதல்-மந்திரி மாணிக் சாகா தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறுகிறது.

மியான்மர் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள மற்றொரு சிறிய மாநிலம் நாகாலாந்து. ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த போது அவர்கள் 1832-ம் ஆண்டு அசாமில் இருந்து மணிப்பூருக்கு செல்ல நேர் வழியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கே இருந்த நாகாலாந்துக்குள் நுழைந்த போது அங்கு வசித்த நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே போர் ஏற்பட்டது. நாகர்களை அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாததால் மோதல் நீண்ட காலம் நீடித்தது. இறுதியில் நாகர்கள் தோல்வி அடைந்ததால், நாகாலாந்து 1880-ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்தது.

1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, அசாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக நாகாலாந்து ஆனது. இதற்கு நாகர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக நாகா தலைவர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் நாகாலாந்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அதன்பிறகு நடந்த மோதல்களில் பலர் கொல்லப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து பிரதமர் நேருவுக்கும் நாகா தலைவர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட 16 அம்ச ஒப்பந்தத்தின்படி, 1963-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதி நாகலாந்து தனி மாநிலமாக முறையாக உருவாக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 11-ந்தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்றம் அமைக்கப்பட்டது.

16 ஆயிரத்து 579 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மாநிலத்தில் சுமார் 20 லட்சம் பேர் வசிக்கிறார்கள். மக்கள் தொகையில் 88 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் ஆவார்கள்.

இந்த மாநிலத்தில் 13 கி.மீ. நீளத்துக்குத்தான் ரெயில்பாதை உள்ளது.

இயற்கை வளம்மிக்க மாநிலமாக இருந்த போதிலும் சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் நாகாலாந்து வந்து செல்வதில் பெரும் சிரமம் இருக்கிறது.

நாகாலாந்தின் கலாசார பெருமைகளையும், பண்பாட்டையும் விளக்கும் வகையில் தலைநகர் கொஹிமாவில் ஆண்டு தோறும் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் இருவாட்சி (இருவாட்சி பறவை) திருவிழா உலக பிரசித்தி பெற்றது ஆகும்.

இங்கு முதல்-மந்திரி நைபியு ரியோ தலைமையிலான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி-பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் இந்த மாநிலத்தின் கவர்னராக பதவி வகிக்கிறார்.

ரெயில் நிலையம் இல்லாத சிக்கிம்

இமயமலை தொடரில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலம், கோவாவை அடுத்து இந்தியாவிலேயே 2-வது சிறிய மாநிலம் ஆகும். தெற்கு வடக்காக 115 கி.மீட்டரும், கிழக்கு மேற்காக 65 கி.மீட்டரும் விஸ்தீரணம் கொண்ட இந்த மாநிலத்தின் மொத்த பரப்பளவே 7,096 ச.கி.மீ.தான். இந்த மாநிலத்தின் வடக்கே சீனாவும், மேற்கே நேபாளமும். கிழக்கே பூடானும், தெற்கே மேற்கு வங்காள மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன. 7 லட்சம் பேர் வசிக்கிறார்கள். உலகிலேயே மூன்றாவது உயர்ந்த சிகரமான கஞ்சன்ஜங்கா (28,208 அடி) சிக்கிமில்தான் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரமான இடத்தில் அமைந்து இருப்பதால் ஏற்ற-இறக்கமான நிலப்பகுதியை கொண்ட இந்த மாநிலத்தில் பெரிய சமதளமான பகுதிகளை பார்ப்பது மிகவும் அரிது.

இந்தியாவில் ரெயில் பாதையோ, ரெயில் நிலையமோ இல்லாத ஒரே மாநிலம் சிக்கிம்.

மன்னராட்சி நடைபெற்று வந்த சிக்கிம் முன்பு இங்கிலாந்து நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்தியா 1947-ல் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற போது, சிக்கிமும் விடுதலை பெற்றது. அதன்பிறகும் அங்கு மன்னராட்சி தொடர்ந்தது. ஆரம்பத்தில் அந்த நாட்டு மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பாததால் அப்போதைய பிரதமர் நேரு, சிக்கிமின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அதற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினார். அதன்படி சிக்கிமின் பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு போன்றவை இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன.

காலப்போக்கில் நேபாளிகளின் ஊடுருவல் அதிகரித்து பிரச்சினைகள் ஏற்பட்டதால், அப்போதைய மன்னருக்கும், காஜியான (பிரதம மந்திரி) லென்பெப் டோரிஜிக்கும் பனிப்போர் நிலவியது. இதனால் டோரிஜி தங்கள் நாட்டை இந்தியாவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்தார். இது தொடர்பாக எடுக்கப்பட்ட பொதுவாக்கெடுப்பில் 97.5 சதவீத சிக்கிம் மக்கள் இந்தியாவுடன் இணைய ஆதரவு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, 1975-ம் ஆண்டு மே 16-ந்தேதி சிக்கிம் இந்தியாவின் 22-வது மாநிலமாக இணைந்தது.

தலைநகர் காங்க்டாக், நாதுலா கணவாய், சோம்கோ ஏரி, குருடோங்மார் ஏரி, சோப்தா பள்ளத்தாக்கு என்று இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. கஞ்சன் ஜங்கா மலையேற்ற வீரர்களுக்கு சிறந்த இடமாக விளங்குகிறது. இங்கு சீன எல்லையையொட்டி 14,400 அடி உயரத்தில் அமைந்துள்ள நாதுலா கணவாய்க்கு செல்ல முறையான அனுமதி பெற வேண்டும். எல்லைக்கு அப்பால் சீன வீரர்கள் நடமாடுவதை பார்க்க முடியும். இந்தியாவில் தனது தேவைக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் சிக்கிம் முதலிடத்தில் இருக்கிறது.

இங்கு 32 சட்டசபை தொகுதிகளும், தலா ஒரு மக்களவை, மாநிலங்களவை தொகுதிகளும் உள்ளன. இங்கு முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் தலைமையில் சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்தவர்.

மியான்மர் எல்லையில் தமிழர்கள்

அருணாசலபிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மாநிலங்கள் மியான்மர் நாட்டுடன் 1,643 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தரைவழி வர்த்தம் நடைபெறுகிறது. மணிப்பூரில் உள்ள மோரே என்ற சிறிய நகருக்கும், மியான்மரில் உள்ள தமு நகருக்கும் இடையே ஓடும் மெனால் என்ற நதி இரு நாடுகளையும் பிரிக்கிறது. இந்த நதியின் குறுக்கே இரு பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் இரு நாட்டு மக்களும் கூடி வர்த்தகம் செய்து கொள்கிறார்கள்.

இந்த மோரே நகரில் ஏராளமான தமிழர்கள் வசிக்கிறார்கள் என்பது ஆச்சரியமான உண்மை ஆகும். ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஏராளமான தமிழர்கள் தேயிலை தோட்டவேலை உள்ளிட்ட பணிகளுக்காக பர்மாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் தாக்குதலுக்கு பயந்து கணிசமான தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பர்மாவில் இருந்து தாய்நாடு திரும்பி மோரேயில் குடியேறினார்கள். 1948-ல் பர்மாவுக்கு ஆங்கிலேயர்கள் சுதந்திரம் வழங்கிய பிறகு, 1962-ல் அங்கு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் எஞ்சியிருந்த இந்தியர்களிடம் பாகுபாடு காட்டப்பட்டது. அவர்கள் தாக்கப்பட்டு, சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதனால் அவர்களில் ஏராளமானோர் இந்தியா திரும்பினர்.

அப்படி தமிழகம் வந்தவர்களில் பலருக்கு இங்குள்ள வாழ்க்கை முறை- உணவு முறை சரியாக ஒத்துப்போகவில்லை. இதனால் மீண்டும் பர்மாவுக்கே போய்விடுவது என்று தீர்மானித்த அவர்கள், அங்கு செல்வதற்காக மணிப்பூருக்கு சென்றனர். ஆனால், எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால், அவர்களால் பர்மாவுக்குள் நுழைய முடியவில்லை. இதனால் அவர்களும் மோரே கிராமத்திலேயே தங்கி விட்டனர். மோரே கிராம வாழ்க்கை முறை பர்மா வாழ்க்கை முறை போன்றே இருந்ததால், அவர்கள் உள்ளூர் மக்களுடன் ஐக்கியமாகி அங்கேயே ஆண்டாண்டு காலமாக வசித்து வருகிறார்கள். மியான்மரில் உள்ள தங்கள் உறவினர்களுடன் அவர்கள் உறவும், வர்த்தக தொடர்பும் வைத்திருக்கிறார்கள்.

மோரே கிராமத்தில் தமிழர்கள் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளிட்ட பல கோவில்களை கட்டி இருக்கிறார்கள். இதில் அங்காள பரமேஸ்வரி கோவில் இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையையொட்டி அமைந்துள்ளது. கோவில் விழாக்களையும், தைப்பொங்கல் போன்ற பண்டிகைகளையும் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

இந்த நிலையில் துரதிருஷ்டவசமாக சில மாதங்களுக்கு முன் மியான்மர் எல்லைக்குள் இரு தமிழர்கள் கொல்லப்பட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தனர். அத்துடன் அந்த மாநிலத்தில் நடந்த கலவரத்தில் பல தமிழர்களின் வீடுகள் மற்றும் கடைகள் எரிக்கப்பட்டது.

மேலும் சமீபத்தில் ெமய்தேய் மக்களுக்கும், பழங்குடியினருக்கும் ஏற்பட்ட மோதலில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி யுள்ளனர். கலவரம் தொடர்வதால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

மரத்தின் வேர்களால் அமைந்த பாலங்கள்

* வடகிழக்கு பிராந்தியம் மலைகள் சூழ்ந்த இயற்கை வளமிக்க மாநிலங்கள் என்பதால் அங்கு பல இடங்களில் சிறிய நீரோடைகள், கால்வாய்களின் குறுக்கே மரத்தின் வேர்கள், கிளைகள் மற்றும் கொடிகளால் இயற்கையாக அமைந்த வித்தியாசமான பாலங்களை காண முடியும். இவற்றை மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த பாலங்களை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். மேகாலயாவின் தெற்கு பகுதியில் உள்ள காஷி, ைஜன்டியா மலைப்பகுதிகளில் இத்தகைய பாலங்கள் முன்பு அதிக அளவில் இருந்தன. அவற்றில் பல பாலங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.

* அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் பிரம்மபுத்ரா நதியின் உப நதியான லோகித் ஆற்றின் குறுக்கே தோலா-சாடியா ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள 9.15 கி.மீ. நீளமுள்ள புபேன் ஹசாரியா பாலம் வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதோடு, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் விளங்குகிறது. இந்தியாவில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிக நீளமான பாலம் இதுதான்.

* அசாமில் தேஜ்பூர் அருகே பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 3 கி.மீ. நீளம் கொண்ட கோலியா பூமோரா சேது பாலமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.

* சிக்கிம் மாநிலத்தில் இரு மலைகளுக்கு இடையே அமைந்துள்ள சிங்சோர் தொங்கு பாலம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆசியாவிலேயே மலைப்பகுதியில் உள்ள 2-வது உயரமான இந்த தொங்குபாலம் இதுதான்.

* அருணாசலபிரதேசத்தில் ஆற்றை கடப்பதற்காக கயிறு மற்றும் மூங்கில்களை கொண்டு 70 மீட்டர் நீளத்துக்கு பழங்குடியின மக்கள் கட்டியுள்ள தொங்கு பாலம் அவர்களுடைய திறமைக்கு சான்றாக விளங்குகிறது.


Next Story