பாரீஸ் ஒலிம்பிக் நாளை கோலாகல தொடக்கம்...10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு


பாரீஸ் ஒலிம்பிக் நாளை கோலாகல தொடக்கம்...10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
x

Image :IOC  

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்தியஅணியில் 117 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளை (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 32 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 329 பந்தயங்கள் நடத்தப்படுகிறது.பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியில் 117 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஆக்கி, கோல்ப், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மர படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய 16 விளையாட்டுகளில் 70 வீரர்களும், 47 வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா சென் நதியில் இந்திய நேரப்படி நாளை இரவு 11 மணிக்கு அரங்கேறுகிறது. இதுவரை இல்லாத ஒரு அம்சமாக இந்த முறை தொடக்க விழா ஸ்டேடியத்திற்கு வெளியே, பாரீஸ் நகரில் பாய்ந்தோடும் சென் நதியில் வித்தியாசமான முறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழா அணிவகுப்பில் வீரர், வீராங்கனைகள் ஏறக்குறைய 100 படகுகளில் 6 கிலோமீட்டர் பயணிக்க இருக்கிறார்கள். தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி மொத்தம் 35 ஸ்டேடியங்களில் நடக்கிறது. இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நடந்து வருகிறது. இதுவரை 90 லட்சதுக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன.


Next Story